உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷ்.. தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி ரொக்க பரிசு அறிவிப்பு!
இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் என்ற பட்டத்தைக் கைப்பற்றி, தேசத்திற்கு பெருமை சேர்த்துள்ள குகேஷ் கடந்து வந்த வெற்றிப் பாதையை காணலாம்...
மிக குறைந்த வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற வீரன் என்ற சாதனையை உருவாக்க வேண்டும். இதுதான் குகேஷின் கனவு. இந்த வரியை கூறும்போது அவருடைய வயது 11. அதனை தற்போது சாதித்து காட்டி அனைவரையும் வியக்க வைத்துள்ளார் குகேஷ்.
குகேஷ் 2006ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். தந்தை ரஜினிகாந்த் மருத்துவர். தாய் பத்மா MICRO BIOLOGIST, குகேஷ் 6 வயதில் செஸ் விளையாட தொடங்கினார். தன் உறவினர்கள் செஸ் விளையாடுவதை பார்த்து தானும் அதில் நுழைந்தார் குகேஷ். அவரது ஆர்வத்தையும் சிறப்பான ஆட்டத்தையும் கண்டு முறைப்படியான பயிற்சிக்கு அனுப்பிவைத்தனர் பெற்றோர். இதன் பலனாக வேகமான எழுச்சி பெற்ற குகேஷுக்கு சர்வதேச அளவில் வெற்றிகள் குவியத் தொடங்கின. 2015இல் ஆசிய பள்ளி மாணவர்களுக்கு இடையிலான தொடர், 2018இல் உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் என வெற்றிகள் குவிந்தன.
12 வயது 7 மாதங்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்று உலகிலேயே மிக குறைந்த வயதில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெற்ற 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார் குகேஷ். கடந்தாண்டு சூப்பர் கிராண்டு மாஸ்டர் ஆகி குறைந்த வயதில் அந்த உயரத்தை தொட்ட முதல் வீரர் ஆனார் குகேஷ்.
பின்னர் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் முன்னணி வீரர்களை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றார். சீன வீரரும், உலக சாம்பியனுமான டிங் லீரெனிடம் முதல் சுற்றிலேயே தோல்வியை சந்தித்தாலும் தன்னுடைய பாணியில் அதை பற்றிய பெரிய கவலை இல்லாமல் அடுத்த சுற்றிலேயே வென்று அதனை சரிசெய்தவர் குகேஷ். இந்த தொடரில் கடும் சவாலை அளித்த குகேஷ், நீண்ட நேரம் நீடித்த இறுதிப் போட்டியில், தமக்கு கிடைத்த சிறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, வெற்றிக் கனியையும் பறித்துள்ளார் குகேஷ்.
நமது கனவை தவமாக கொண்டு விடா முயற்சியுடன் போராடினால் வெற்றி நிச்சயம் என்பதை இந்த வெற்றியின் மூலம் உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார் குகேஷ்...
இந்நிலையில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர் குகேஷுக்கு மாநிலக்களவையில் பாராட்டு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது மாநிலங்களவை தலைவர் ஜெக்தீப் தன்கர் புகழாரம். மேலும் தமிழக அரசு அவருக்கு 5 கோடி ரூபாய் ரொக்கப்பரிசை அறிவித்துள்ளது.