செஸ் ஒலிம்பியாட்: ஆட்டத்தில் கலக்கும் பார்வைச் சவால் கொண்ட வீராங்கனை நடாஷா

செஸ் ஒலிம்பியாட்: ஆட்டத்தில் கலக்கும் பார்வைச் சவால் கொண்ட வீராங்கனை நடாஷா
செஸ் ஒலிம்பியாட்:  ஆட்டத்தில் கலக்கும் பார்வைச் சவால் கொண்ட வீராங்கனை நடாஷா

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நடாஷா எனும் பார்வைச் சவால் கொண்ட மாற்றுத்திறனாளி பெண் பியூட்டோ ரிகா நாட்டின் சார்பாக போட்டியில் பங்கேற்று விளையாடி வருகிறார். அவருக்கு உதவுவதற்காக இரண்டு தன்னார்வ இளைஞர்கள் நாள்தோறும் செஸ் காய்களை நகர்த்தி வருகின்றனர். பார்வைச் சவால் இருந்தாலும் லட்சியத்தை அடைய நம்பிக்கையை ஏந்தி சென்னை ஒலிம்பிக் போட்டிக்கு வந்திருக்கிறார் நடாஷா.

பிறக்கும்போதே இடது கண் முழுமையாக பார்வை இன்றியும், வலது கண் பார்வை குறைபாடோடும் இருந்தவர் நடாஷா மொர்லஸ் சான்டோஸ். தனது 12-ஆவது வயதில் இருந்து சதுரங்க போட்டியில் விளையாட ஆரம்பித்த நடாஷா, விரைவிலேயே பியூட்டோ ரிகா நாட்டில் முன்னணி செஸ் வீராங்கனைகளில் ஒருவராக மாறினார். நடாஷாவின் பெற்றோர்களுக்கு சதுரங்க பின்புலம் இல்லாமல் இருந்தாலும் மகளின் ஆர்வத்தை பார்த்து அவளுக்கு பயிற்சி அளிக்க உதவியுள்ளனர்.


இடைவிடாத தொடர் முயற்சியினாலும், ஆர்வத்தினாலும் 2015 சர்வதேச பெண் கிராண்ட் மாஸ்டர் எனும் பட்டத்தை பெற்றார். 24 வயதாகும் நடாஷா செஸ் ஒலிம்பியாட் போட்டியில் ஒரே பார்வை சவால் உள்ள போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பார்வையற்றோருக்கான சதுரங்கப் பலகையில் விளையாடும் நடாஷாவுக்கு உதவியாக நம்மூர் தன்னார்வலர்கள் இருவர் சதுரங்க காய்களை நகர்த்தி வருகின்றனர்.

இவ்வாறாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அமெரிக்காவிடம் முதல் சுற்றில் தோல்வியை சந்தித்த நடாஷா, டோஹிரியோனோவாவுடன் இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றுள்ளார். டிரினிடாட் & டொபாகோ நாட்டுடன் ஆடிய நடாஷா இன்று போட்டியை டிரா செய்தார். இன்று மாற்றுத் திறனாளியான சிங்கப்பூர் பயிற்சியாளர் தாமஸ் நடாஷாவை நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறி பாராட்டினார். மாற்றுத்திறனாளிகளையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த விளையாட்டு சதுரங்கம் என பெருமிதத்தோடு நம்மிடம் தெரிவிக்கிறார் நடாஷா சான்டோஸ்.

பியூட்டோ ரிகா பெண்கள் அணியின் முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடாஷா பார்வை குறைபாடு இருந்தாலும் நேர மேலாண்மையை ஆட்டத்தின்போது சிறப்பாக கடைபிடிப்பதற்கான பயிற்சியை எடுத்துள்ளார். சென்னை செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்பதை மிகப்பெரிய வாய்ப்பாக கருதுவதாகவும் அடுத்தடுத்த சுற்றுகளில் சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி எடுப்பதாக கூறுகிறார் நடாஷா. நம்பிக்கை நார் மட்டும் கையில் இருந்தால் போதும் உதிர்ந்த பூக்கள் ஒவ்வொன்றாக ஒட்டிக்கொள்ளும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார் நடாஷா.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com