மூச்சை‘தம்’கட்டி விளையாடிய ஆழ் நீச்சல் செஸ் வீரர்கள்
பிரிட்டனில் நீச்சல் குளத்துக்கு அடியில் நடத்தப்பட்ட செஸ் சாம்பியன்ஷிப் போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
தலைநகர் லண்டனில் நடந்த இப்போட்டிக்காக காந்தகத்தில் உருவாக்கப்பட்ட செஸ் காய்கள் பயன்படுத்தப்பட்டன. நீரில் அவை மூழ்காது என்பதால், காந்தக காய்கள் பயன்படுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். நீச்சல் குளத்தின் ஆழமான பகுதியில் செஸ் போர்டு வைக்கப்பட்டு போட்டி நடத்தப்பட்டதால், ஒவ்வொரு முறையும் மேலெழும்பி வந்து காற்றை சுவாசித்து விட்டு, பின்னர் மூச்சை அடக்கி போட்டியாளர்கள் விளையாட நேர்ந்தது.
மூளைக்கும், உடலுக்கும் சேர்த்து நடத்தப்பட்ட இப்போட்டி தங்களை உற்சாகப்படுத்தியதாக போட்டியாளர்கள் தெரிவித்தனர். வழக்கமான செஸ் போட்டிகள் அரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்து விடும். ஆனால் நீச்சல் குளத்தில் நடந்த போட்டி என்பதால், ஒவ்வொரு போட்டியும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீண்டது. இறுதியில் ராஜ்கோ வுஜதோவிக் என்ற வீரர் வெற்றிப் பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.