தீர்ப்பு வழங்குவதற்கும் செஸ் உதவிபுரிகிறது! ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற நீதிபதி ஆருடம்!

தீர்ப்பு வழங்குவதற்கும் செஸ் உதவிபுரிகிறது! ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற நீதிபதி ஆருடம்!
தீர்ப்பு வழங்குவதற்கும் செஸ் உதவிபுரிகிறது! ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்ற நீதிபதி ஆருடம்!

செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் (Saint Vincent and the Grenadines) என்ற கரீபியன் நாட்டைச் சார்ந்த நீதிபதி ஒருவர் சதுரங்கத்தின் பேரில் அதீத ஆர்வம் கொண்டு செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறார். தீர்ப்பு எழுதுவதற்கு சதுரங்க விளையாட்டும் தனக்கு துணை நிற்பதாக தெரிவிக்கும் அவர் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

உலக வரைபடங்களில் தேடும் அளவுடைய கரீபியன் தீவுகளை உள்ளடக்கிய நாடுகளில் ஒன்றான செயின்ட் வின்சன்ட் கேரணட்டீஸ் நாடுகளில் இருந்து செஸ் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்க வந்துள்ள ஒரு வீரர் தான் பிரயான் காட்டில்.

சிறு வயது முதலே சதுரங்க விளையாட்டு மீது தீராத ஆர்வம் கொண்ட பிரயான் காட்டில் தொடர்ச்சியாக பயிற்சியை மேற்கொண்டார். கடல் சார் மற்றும் சுற்றுலா மூலம் பொருளாதாரம் ஈட்டும் அந்த குட்டித் தீவு தேசத்தில் இருந்து வந்த பிரயான் சதுரங்க விளையாட்டில் ஆர்வம் கொண்டு விளையாடி வந்த போதிலும், வருமானம் ஈட்டும் அளவிற்கு சதுரங்கம் அவருக்கு கைகொடுக்கவில்லை.

இதனால் வாழ்கையில் பணம் ஈட்டுவதற்காக கல்லூரிப் படிப்பில் சட்ட படிப்பைத் தேர்ந்தெடுத்தார். சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனார் பிரயான். அவரது வாதத் திறமையால் விரைவில் நீதிபதியாக உயர்ந்தார். நீதிபதி ஆனாலும் தான் விருப்பம் கொண்ட சதுரங்க விளையாட்டு விளையாடுவதை அவர் நிறுத்தவில்லை.

அதே நேரத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகை மட்டுமே கொண்ட அந்த குட்டி தீவு தேசத்தில் சதுரங்க விளையாட்டிற்கான அங்கீகாரமே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தான் கிடைத்தது. ஆம்! சர்வதேச செஸ் கூட்டமைப்பில் செயின்ட் வின்சென்ட் மற்றும் கிரெனடைன்ஸ் நாட்டின் செஸ் அணி பதிவு செய்து இரண்டு ஆண்டுகள்தான் ஆகின்றன. தற்போது வரை இந்த நாட்டில் ஒரு கிராண்ட் மாஸ்டர் கூட இல்லாத சூழலில் செஸ் மீது உள்ள காதல் காரணமாக தாங்களாகவே பயிற்சிகளை மேற்கொண்டு சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பதிவு செய்து விளையாடி வரும் 5 வீரர்களை கொண்டு முதல் முறையாக ஒலிம்பியாட் தொடருக்கு வந்துள்ளனர்.

இவ்வளவு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்குவது; மீதி நேரத்தில் அந்த நாட்டின் சிறுவர்களுக்கு செஸ் பயிற்சி வழங்குவது என தன் வாழ்க்கையை கழித்து வந்தார் பிரயான் காட்டில். அவருக்கு இந்த ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகவும், செஸ் விளையாடுவதால் தன்னால் ஒரு நீதிபதியாக சிறப்பாக செயல்பட முடிவதாகவும் கூறுகிறார். “சிறந்த முடிவுகளை யோசித்து எடுக்க செஸ் விளையாட்டு தனக்கு மிகவும் உதவுகிறது. செஸ் என்பது அனைவரும் விளையாட வேண்டிய ஒரு விளையாட்டு. அது நம்மை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.” என்று நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார் பிரயான்

8 சுற்றுகளில் விளையாடியுள்ள பிரயான் 3 வெற்றி, 3 டிரா, 2 தோல்வி என்ற கணக்கில் விளையாடி வருகிறார். சர்வதேச செஸ் கூட்டமைப்பில் பதிவு செய்த இரண்டு ஆண்டுகளில் ஒலிம்பியாட் தொடரில் பங்கேற்று இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கும் பிரயான், விரைவில் தங்கள் நாடு ஒரு செஸ் கிராண்ட் மாஸ்டரையும் உருவாக்கும் என அடித்துச் சொல்கிறார் பிரயான் காட்டில்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com