ஐஎஸ்எல் கால்பந்து: முதல் அரையிறுதியில் கோவாவை பந்தாடிய சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து: முதல் அரையிறுதியில் கோவாவை பந்தாடிய சென்னை
ஐஎஸ்எல் கால்பந்து: முதல் அரையிறுதியில் கோவாவை பந்தாடிய சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டி ஒன்றில் முதல் நிலை அணியான கோவாவை பந்தாடி சென்னை அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

தொடர் தோல்விகள் துரத்தினாலும் நம்பிக்கை இழக்காமல் போராடி, வெற்றிப் பாதைக்கு திரும்புவதே சிறந்த அணிக்கு எடுத்துக்காட்டு. ஆனால் சென்னை அணியோ, தோல்விகளின் பிடியிலிருந்து விடுபட்டதோடு மட்டுமின்றி அரையிறுதிக்கே முன்னேறி வியக்க வைத்தது. கடந்த சீசனில் மிக மோசமான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சென்னை அணிக்கு, புள்ளிகள் பட்டியலில் கடைசி இடம்தான் கிடைத்தது. நடப்பு சீசனிலும், சென்னை விளையாடிய முதல் ஆறு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி கண்டது.

அதனால், சென்னை அணியின் பயிற்சியாளர் ஜான் கிரகோரி அதிரடியாக நீக்கப்பட்டு, ஓவன் காய்ல் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். கால்பந்து விமர்சகர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சென்னை அணி, அரையிறுதிக்கு முன்னேறுவது கடினம் என்றே கருதினர். ஆனால் "எதுவம் சாத்தியம்" என்கிற எண்ணத்தில், மனம் தளராமல் பயணத்தை தொடர்ந்தனர் சென்னை அணி வீரர்கள். ஓவன் காய்லின் பயிற்சியின் கீழ் களம் கண்ட சென்னை அணி, வெற்றிப் பாதைக்கு திரும்பியது. குறிப்பாக, தொடர்ச்சியாக விளையாடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வெற்றிக் கண்டும், ஒரு ஆட்டத்தை டிரா செய்தும் அசத்தியது சென்னை அணி. பலமான மும்பை அணியை வீழ்த்தி அரையிறுதிக்குள் அசத்தலாக நுழைந்தது சென்னை.

‌இந்நிலையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் கட்ட அரையிறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில், பலம் வாய்ந்த கோவா அணியுடன் சென்னை அணி பலப்பரீட்சை நடத்தியது. முதல் பாதி ஆட்டம் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், இரண்டாவது பாதி ஆட்டம் அனல் பறந்தது. ஆட்டத்தின் ‌54-வது, 61‌-வது, 77-வது மற்றும் 79-வது நிமிடங்களில் சென்னை அணி கோல் மழை பொழிந்தது.

கோவா அணியின் கோல் முயற்சிகளை சென்னை அணியின் கோல் கீப்பர் விஷால் கெய்த், லாவகமாக முறியடித்தார். எனினும் 85-வது நிமிடத்தில் கோவா அணி ஒரு கோல் அடித்து, ஆறுதல் அடைந்தது. ஆட்ட நேர முடிவில் சென்னை அணி, நான்கு - ஒன்று என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ‌இந்த இரு‌ அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது கட்ட அரையிறுதி ஆட்டம் கோவாவில் வரும் 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com