ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 46வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் சிக்கர் தவான் 79 (49), வில்லியம்சன் 51 (39) ரன்கள் சேர்த்தனர்.
பின்னர் களமிறங்கிய சென்னை அணியில் தொடக்க வீரர்களான வாட்சன் மற்றும் அம்பதி ராயுடு ஆகிய இருவருமே விக்கெட்டை பறிகொடுக்கமால் நிலைத்து அதிரடியாக ஆடினர். இதனால் சென்னை அணியின் ரன்கள் மளமளவென உயர்ந்தது. இருவருமே அதிரடியாக அரை சதம் அடித்தனர். 134 ரன்கள் என்ற நிலையில் வாட்சன் ரன் அவுட் ஆனார். இதையடுத்து வந்த ரெய்னா 2 ரன்களிலேயே வெளியேறினார். பின்னர் வந்த தோனி, அம்பத்தி ராயுடுவுடன் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். இதில் 90 ரன்களை கடந்து விளையாடி அம்பதி ராயுடு, சதம் அடிப்பதற்கு ஏதுவாக கேப்டன் தோனி பெருந்தன்மையுடன் விளையாடினார்.
19வது ஓவரில் ராயுடு 99 ரன்களுடன் களத்தில் இருக்க, அணியின் வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவை என்றபோது தோனி விளையாடினார். அவர் 4 அல்லது 6 அடித்திருந்தால் அணி வெற்றி பெற்றிருக்கும். ஆனால் தோனி ஒற்றை ரன்னை அடித்து ராயுடுவை ஆடச்செய்தார். பின்னர் ராயுடு ஒரு ரன் அடித்து சதம் போட்டார். தோனி அவரை கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தார். அடுத்து தோனி ஒரு ரன் அடிக்க சென்னை அணி வெற்றி பெற்றது.