யாருக்கு கோப்பை..? சிஎஸ்கேவுக்கு கடின இலக்கை நிர்ணயித்த ஹைதராபாத்
மும்பையில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, சென்னை அணியின் வெற்றிக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
11-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.மாலை 7 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக கோஸ்வாமி, தவான் ஆகியோர் களமிறங்கினர். சென்னை அணி சார்பில் தீபக் சஹார் முதல் ஓவரை வீசி 6 ரன்கள் கொடுத்தார். இரண்டாவது ஓவரை நிகிடி வீசினார்.
அந்த ஓவரின் ஐந்தாவது பந்தில் கோஸ்வாமி 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார். அதனையடுத்து கேப்டன் வில்லியம்சன் களம் இறங்கினார். நிதானமாக விளையாடிய வந்த தவான்-வில்லியம்சன் ஜோடி அணியின் ஸ்கோரை 64 ரன்களாக உயர்த்தியிருந்தபோது தவான், ஜடேஜா பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். இந்த ஐபிஎல் சீசன் முழுவதுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கேப்டன் வில்லியம்சன் முதலில் நிதானமாக விளையாடினாலும், பிறகு அதிரடியாக விளையாடினார்.
சென்னை அணியின் சார்பில் 12-வது ஓவரை வீச வந்த கரண் சர்மாவின் முதல் பந்தில் வில்லியம்சன் தோனியிடம் ஸ்டெம்பிங் ஆகி வெளியேறினார். அவர் 36 பந்துகளில் 47 ரன்கள் சேர்த்தார். அதில் 2 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். அடுத்து வந்த யூசுப் பதான் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். இறுதியில் 20 ஓவர் முடிவில் ஹைதரபாத் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 178 ரன்கள் சேர்த்தது. கடைசி வரை ஆட்டமிழக்காத பதான் 25 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார்.