சென்னையா ? டெல்லியா ? - இன்றைய போட்டியில் கவனிக்க வேண்டியவை..!
ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருக்கிறது. அனைத்து அணிகளும் வெற்றியை நோக்கி ஓடத்தொடங்கியுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் சுவாரஸ்யம் கூடிக்கொண்டே போகிறது. அந்த வகையில் ஐபிஎல் தொடரில் 7வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன. துபாய் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இது 3வது போட்டியாகும். முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எளிமையாக வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் போராடி தோற்றது. இந்தப் போட்டியில் செய்த பிழைகளை திருத்திக்கொண்டு டெல்லிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கவுள்ளது. குறிப்பாக அணியில் மாற்றம் இருக்க வாய்ப்புண்டு. கடந்த போட்டியில் சென்னை அணியின் பவுலிங் சொதப்பியதால், இந்த முறை பவுலிங்கை வலுப்படுத்தும் வகையில் அணி அமைக்கப்படலாம். இந்திய சுழற்பந்து வீச்சாளர் பியூஸ் சாவ்லாவிற்கு பதில் தென்னாப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தஹிர் அணிக்குள் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது. அத்துடன் வேகப்பந்து வீச்சாளர் நிகிடிக்கு பதில் ஷர்துல் தகூர் அணியில் சேர்க்கப்படலாம்.
மும்பைக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி 70 ரன்களுக்கு மேல் குவித்த அம்பத்தி ராயுடு ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அதேபோல், டெல்லிக்கு எதிரான இந்தப் போட்டியிலும் அவர் விளையாடமாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் சோபிக்காத முரளி விஜய்க்கு பதிலாக, வேறொரு வீரரை எடுக்க வேண்டும் என விமர்சனங்கள் எழுந்துள்ளது. அதனால், அதுகுறித்து அணி நிர்வாகம் யோசிக்கும் என்றே தெரிகிறது.
டெல்லி அணியை பொறுத்தவரையில் கடந்த போட்டியில் பஞ்சாப் அணியிடம் நூலிழையில் வெற்றியை பெற்றனர். கடைசி ஒரு ரன்னில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், பின்னர் சூப்பர் ஓவரிலும் ரபாடாவின் நெத்தியடி பந்துவீச்சு மூலம் வெற்றியை பெற்றது டெல்லி. டெல்லி அணியை பொறுத்துவரையில் இந்த முறை மாற்றம் இருக்கலாம். இரண்டாவதாக களமிறக்கப்பட்ட ஹெட்மெயருக்கு பதிலாக ரஹானேவை அணிக்குள் கொண்டுவரலாம். பவுலிங்கில் மோகித் ஷர்மாவுக்கு பதில் இஷாந்த் ஷர்மா சேர்க்கப்படலாம். அஸ்வின் காயத்திலிருந்து மீளாத பட்சத்தில் அவருக்கு பதிலாக அமித் மிஸ்ராவுக்கு வாய்ப்பளிக்கப்படலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் இந்த இரு அணிகளும் மோதிய கடைசி 5 போட்டிகளில் 4 போட்டிகளை சிஎஸ்கே வென்றுள்ளது. ஒரு போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை அணிக்கு ஷேன் வாட்சன் மற்றும் டுபிளசிஸ் பேட்டிங் பலமாக அமையும். டெல்லி அணியில் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக பேட்டிங் செய்ய வாய்ப்புண்டு. பவுலிங்கில் தீபக் சாஹர், இம்ரான் தஹிர் விக்கெட்டுகளை வீழ்த்தலாம். டெல்லியில் ரபாடா பந்துவீச்சு சவாலாக இருக்கும். ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் ஜடேஜா, ஸ்டோயினிஸ் மற்றும் அக்ஷர் படேல் திறம்பட செயல்படாலம்.
இரண்டு அணிகளின் பலம் மற்றும் பலவீனத்தை வைத்து பார்க்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம். இருப்பினும் டி20 போட்டிகள் வெற்றி என்பது இறுதிவரை கணிக்க முடியாது என்பதால் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.