‘எத்தனை கேட்ச்கள்தான் கோட்டைவிடுவது’ சொதப்பிய சென்னை வீரர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. மும்பை, சென்னை அணிகளுக்கு இடையிலான போட்டி என்றாலே இரு அணிகளின் ரசிகர்களின் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருக்கும். சென்னை அணி மற்ற எல்லா அணிகளுக்கும் சவாலாக இந்த ஐபிஎல் தொடரில் இருந்தது. ஆனால், மும்பை அணியிடம் மட்டும் இரண்டு லீக் போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.
லீக் போட்டியில் பெற்ற தோல்விக்கு சென்னை அணி இன்றைய போட்டியில் பதிலடி கொடுக்கும் என்று சிஎஸ்கே ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். ஆனால், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, வழக்கம் போல் சொதப்பியது. பவர் பிளேவில் 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்தது. இறுதிவரை சென்னை அணியால் மீளவே முடியவில்லை. ராயுடு, தோனி கொஞ்சம் நிதானமாக விளையாடினர். இருப்பினும், சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது.
மிகவும் குறைவான ரன்கள் என்பதால், அதிக பேட்டிங் பலம் கொண்ட மும்பை அணி எளிதில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், சென்னை ரசிகர்கள் இருந்த ஒரே நம்பிக்கை தோனியின் கேப்டன்ஷிப். மற்றொரு நம்பிக்கை சிஎஸ்கேவின் ஸ்பின்னர்ஸ்.
ரோகித் சர்மா 4 ரன்னில் ஆட்டமிழக்க, டி காக்கும் 8 ரன்னில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 21 ரன்களுக்குள் மும்பை அணி 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அதனால், சென்னை அணி பக்கம் காற்றுவீசியது. ரசிகர்களும் உற்சாகமடைந்தனர். ஆனால், சென்னை வீரர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதற்கு முக்கியமான காரணம். சென்னை வீரர்கள் கோட்டை விட்ட ஏராளமான கேட்சுகள்தான்.
ஹர்பஜன், இம்ரான் தஹிர், ஜடேஜா என சுழற்பந்துவீச்சாளர் தம்கட்டி அவ்வளவு சிறப்பாக பந்துவீசினார்கள். ஆனால், எளிதான பல கேட்ச்களை சென்னை வீரர்கள் கோட்டைவிட்டனர். தொடக்கத்திலே முரளி விஜய் ஒரு கேட்ச் விட்டார். இறுதியில், ஜடேஜா ஓவரில் வாட்சன் எளிமையாக கைக்கு வந்த பந்தை கோட்டைவிட்டார். அந்த பந்தினை வாட்சன் பிடித்திருந்தால் போட்டியே மாறியிருக்கும். ஏனெனில் அதற்கு முந்தைய ஓவரில்தான் தாஹிர் இரண்டு விக்கெட் சாய்த்து இருந்தார். அதுவும் சிறப்பாக விளையாடி வந்த சூர்ய குமாரின் கேட்ச் அது. அந்த கேட்ச் பிடிக்கப்பட்டிருந்தால் அது சென்னை அணிக்கு ஹாட்ரிக் விக்கெட்டாக இருந்திருக்கும்.
இறுதியில், 18.3 ஓவரில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. மும்பை அணியில் சூர்ய குமார் யாதவ் 54 பந்தில் 71 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். இந்தப் போட்டியிலாவது மும்பை அணியை சென்னை அணி வெற்றி பெற்றுவிடும் என எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
ஒட்டுமொத்தமாக அதிக கேட்சுகளை தவறவிட்டது, பீல்டிங்கில் சொதப்பியது, டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் வழக்கம்போல் பெவிலியன் திரும்பியது, எப்போதும் தோனியை மட்டும் நம்பி இருப்பது..இதுவெல்லாம்தான் தோல்விக்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் சென்னை ரசிகர்களுக்கு ஒரே ஆறுதல் மற்றொரு வாய்ப்பு இருக்கிறது என்பதுதான்....