“சுழற்பந்துவீச்சில் பலமாக உள்ளோம்” - சி.எஸ்.கே பயிற்சியாளர் ஃபிளமிங்
2019ஆம் ஐபிஎல் தொடரை பொருத்தவரை சி.எஸ்.கே சுழற்பந்து வீச்சில் பலத்துடன் இருப்பதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் டி20 தொடர் வரும் 23ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. சென்னை அணியின் பயிற்சியாளராக இந்த முறையும் ஸ்டீபன் ஃபிளமிங் செயல்படவுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டி தொடர்பாக பேசிய ஸ்டீபன், “நியூசிலாந்து மசூதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அந்த நேரத்தில் குடும்பத்துடன் சிங்கப்பூரில் இருந்தேன். நியூசிலாந்து மக்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. சி.எஸ்.கே அணியில் கேதர் ஜாதவ் காயத்திற்கு பின் இணைந்துள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சி.எஸ்.கே சொந்த மண்ணில் அனைத்து போட்டிகளையும் விளையாடுகிறது. சுழற்பந்துவீச்சு நமது அணியில் பலமாக அமைந்துள்ளது. இந்த முறையும் கோப்பையை தக்கவைக்க முயற்சிப்போம்” என்று தெரிவித்தார்.
அவரைத் தொடர்ந்து பேசிய கேதர் ஜாதவ், “ஒவ்வொரு வீரருக்கும் உலகக் கோப்பை அணியில் விளையாடுவது கனவு. நானும் அப்படித்தான் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடுவதே எனது ஆசை. இருப்பினும் ஐபிஎல் தொடரில் காயத்திற்கு பிறகு அணியில் இணைந்துள்ளேன். எனவே வெற்றிக்காக பாடுபடுவேன்” என்று கூறினார்.