அபுதாபி மைதானம் இன்று எப்படியிருக்கும்..? : கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

அபுதாபி மைதானம் இன்று எப்படியிருக்கும்..? : கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!
அபுதாபி மைதானம் இன்று எப்படியிருக்கும்..?  : கவனிக்க வேண்டிய விஷயங்கள்..!

நடப்பு ஆண்டின் ஐபிஎல் போட்டி யுஏஇ-ன் அபுதாபி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் என்ற இரண்டு ஜாம்பவான்கள் மோதவுள்ளதால், சமூக வலைத்தளங்கள் ஸ்தம்பித்துக்கொண்டிருக்கின்றன. இதற்கு காரணம் ஐபிஎல் மீது ஏற்பட்டிருக்கும் எதிர்பார்ப்பு தான். கடந்த மார்ச் மாதமே இந்தியாவில் நடைபெறயிருந்த ஐபிஎல் தொடர் கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, நீண்ட இடைவெளிக்கு பின்னர் யுஏஇ-ல் நடைபெறவுள்ளதால் ரசிகர்களின் காத்திருப்பு பெரும் எதிர்பார்ப்பாக மாறியிருக்கிறது.

அபுதாபி, ஷர்ஜா மற்றும் துபாய் ஆகிய மூன்று மைதானங்களில் மட்டும் இந்த முறை தொடரின் அனைத்து போட்டிகளும் நடைபெற உள்ளன. இதனால் கிரிக்கெட் கணிப்பாளர்கள் பலரும் போட்டியின் போக்கு எப்படி இருக்கும் என்றும், மைதானங்களில் பங்கு என்ன என்றும் கணித்து வருகின்றனர். ஏனென்றால் எந்த ஒரு கிரிக்கெட் போட்டியாக இருந்தாலும் அதில் மைதானத்தின் பங்கு குறிப்பிடத்தகுந்த ஒன்றாகும். உதாரணத்திற்கு சுழற்பந்து வீச்சு நன்றாக எடுபடும் ஒரு மைதானத்தில் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சாளர்களை மட்டுமே வைத்துக்கொண்டு களமிறங்கினால் அந்த அணி வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவுதான்.

அத்துடன் முதல் பேட்டிங்கிற்கு சாதகமான ஒரு மைதானத்தில், டாஸ் வென்ற ஒரு அணி 2வது பேட்டிங்கை தேர்வு செய்தால், பின்னர் எதிரணியின் ரன்களை சேஸிங் செய்வதில் சிரமம் ஏற்பட்டு விடும். இதனால் எதிரணிக்கு ஏற்றாற்போல அல்லாமல், மைதானத்திற்கு ஏற்றாற்போலவும் ஒரு அணி திட்டமிட்டு ஆட வேண்டியது அவசியமாகும்.

அதன்படி, இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான முதல் ஐபிஎல் போட்டி நடைபெறவுள்ள அபுதாபி மைதானம் குறித்து காண்போம். 2004ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மைதானத்தின் அரங்கம் 20 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் அமைக்கப்பட்டது. டி20 போட்டிகளில் பவுலிங் வலுவான அணிக்கே இந்த மைதானம் சாதகமாக இருக்கும். இதுவரை 44 டி20 போட்டிகள் இங்கு நடந்துள்ளன. இதில் 19 முறை முதல் பேட்டிங் செய்த அணியும், 25 முறை சேஸிங் செய்த அணியும் வெற்றி பெற்றிருக்கின்றன. முதல் பேட்டிங் செய்யும் அணி சராசரியாக இந்த மைதானத்தில் 140 ரன்களை எடுத்துள்ளன. இந்த மைதனாத்தில் அதிகபட்ச ரன் குவிப்பாக 225 ரன்கள் இருக்கிறது. குறைந்த பட்ச ரன் சேர்ப்பாக 87 ரன்கள் உள்ளது. சேஸிங்கில் அதிகபட்ச ஸ்கோராக 166 ரன்களும், குறைந்தபட்ச இலக்குடன் வெற்றி பெற்றது 129 ரன்களாகவும் இருக்கிறது.

இன்றைய போட்டி யுஏஇ நேரப்படி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதால், வெயிலின் தாக்கம் என்பது இருக்காது. வெப்பநிலை என்பது குறைவாகவே இருக்கும். அத்துடன் அபுதாபி மைதானத்தின் பவுண்டரிகள் நீண்ட தூரம் கொண்டது என்பதால், தூக்கி அடிக்கப்படும் பந்துகள் கேட்ச் ஆவதற்கு வாய்ப்பு அதிகம். லாங்க் சிக்ஸர்கள் மட்டும் எடுபடும். அத்துடன் பவுண்டரிகளும் எளிதில் கிடைத்துவிடாது. ரன்களை பெரும்பாலும் ஓடியே எடுக்க நேரிடும். டி20 போட்டி என்பதால், அதற்கேற்றவாறு விறுவிறுப்புடன் செல்லும் வகையில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அபுதாபி மைதானத்தில் வேகப்பந்து இன்று நன்றாக எடுபடும் என கணிக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் பேட்ஸ்மேன்களுக்கும் இன்றைய பிட்ச் வசதியாக இருக்கும். குறிப்பாக அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேன்களே அதிக ரன்களை எடுக்க வாய்ப்புள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com