எந்த இலக்கையும் எட்டி பிடிப்போம்: சாம் பில்லிங்ஸ்
எந்த இலக்கையும் அடையும் அணியாக சென்னை உள்ளது என அந்த அணியின் வீரர் சாம் பில்லிங்ஸ் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைப்பெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களை குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணி ஆரம்பத்தில் இருந்தே சிறப்பாக விளையாடியது. 15 ஓவர்களைக் கடந்த நிலையில் ஆட்டம் பரபரப்பாகவே காணப்பட்டது. கடைசி 5 ஓவர்களுக்கு 58 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அதிரடியாக விளையாடிய சாம் பில்லிங்ஸ் 23 பந்துகளில் 56 ரன்களை எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இறுதி ஓவரில் ஒரு பந்து மீதம் இருந்த நிலையில், ஜடேஜா அடித்த சிக்சரால் சென்னை அணி மீண்டும் வெற்றி பெற்றது.சாம் பில்லிங்ஸ் ஆட்டநாயகனான தேர்வு செய்யப்பட்டார்.
இதுகுறித்து சாம் பில்லிங்ஸ் கூறுகையில், “ஜாம்பவான்கள் இருக்கும் அணியில் விளையாடுவது கடினமான ஒன்று. ஐபிஎல்-லில் இது ஒரு சிறந்த விஷயம். ஹஸ்சியிடம் கற்றுக்கொள்ள இது ஒரு நல்ல சந்தர்ப்பம். அவர் ஒரு பேட்டிங் பயிற்சியாளரும் கூட. உங்களுக்கு பிளான் A, பிளான் B, பிளான் C என விருப்பங்கள் இருக்கும். ஆனால் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். அதனை செயல்படுத்த வேண்டும். இது என்னுடைய நாளாக அமைந்ததற்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதல் போட்டியில் பிராவோவின் அதிரடியை பார்த்திருப்பீர்கள். நீங்கள் இதனை ஆழமாக பார்க்க வேண்டும். எங்கள் பேட்டிங் ஆர்டர் பலம் வாய்ந்ததாக உள்ளது. எந்த ஒரு இலக்கையும் அடையும் அணியாக நாங்கள் உள்ளோம்” என்றார்.