"சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்" - விராட் கோலி!

"சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்" - விராட் கோலி!
"சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள்"  - விராட் கோலி!

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் புத்திசாலிகள் என்றும் அவர்களின் புரிதல் அபாரமானது என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி புகழ்ந்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா 318 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இதனையடுத்து முதல் டெஸ்ட்டில் பெற்ற தோல்விக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. சென்னையில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால் இரண்டாவது போட்டிக்கு 50% ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டார்கள்.

சென்னையில் பெற்ற வெற்றிக்கு பின்பு பேசிய விராட் கோலி "ரசிகர்கள் இல்லாமல் சொந்த நாட்டில் முதல் போட்டியில் விளையாடியது சற்று வித்தியாசமாக இருந்தது. ரசிகர்கள் இல்லாத கேலரிகள் வெறிச்சோடி இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் முதல் போட்டியில் சுவாரஸ்யமே இல்லை, ஒருவித உத்வேகமும் கிடைக்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் நாங்கள் மீண்டு வந்து சிறப்பாக விளையாடினோம். ரசிகர்களின் ஆரவாரம் உத்வேகத்தை கொடுத்தது. ஒரு அணியாக எங்களது மன வலிமையை நிரூபித்தது" என்றார்.

மேலும் பேசிய அவர் "சென்னை ரசிகர்கள் பற்றி அனைவரும் அறிந்ததே. அவர்கள் மிகவும் புத்திசாலிகள். கிரிக்கெட்டின் புரிதல் சென்னை ரசிகர்களுக்கு அபாரமாக இருக்கிறது. ஒரு பவுலர்களுக்கு 15 நிமிடம் முதல் 20 நிமிடம் வரை ரசிகர்களின் உத்வேகம் கிடைக்க வேண்டுமென்றால் அதனை சென்னை ரசிகர்கள் செய்துவிடுகிறார்கள். ஆடுகளத்தின் தன்மை இரு அணி வீரர்களையுமே சோதித்தது. இரு இன்னிங்ஸிலும் 300 ரன்களை எட்ட முயற்சித்தோம். இந்தப் போட்டியில் பன்ட் சிறப்பாக செயல்பட்டார். அஸ்வின் பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே தோள் கொடுத்தார்" என்றார் விராட் கோலி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com