7 ஓவரில் 107 ரன் சேஸிங்! அதிரடி காட்டிய ஷபாலியை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கேப்டன்!

7 ஓவரில் 107 ரன் சேஸிங்! அதிரடி காட்டிய ஷபாலியை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கேப்டன்!
7 ஓவரில் 107 ரன் சேஸிங்! அதிரடி காட்டிய ஷபாலியை புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய கேப்டன்!

மகளிர் டி20 பிரீமியர் லீக் போட்டியில் குஜராத் ஜியண்ட்ஸ் அணிக்கு எதிராக அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஷபாலி வெர்மா, 7 ஓவர்களிலேயே 107 ரன்களை சேஸிங் செய்து போட்டியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று கொடுத்து அசத்தினார்.

உமன்ஸ் ஐபிஎல் என அழைக்கப்படும் மகளிர் பிரீமியர் லீக் டி20 தொடரானது, பல அற்புதமான போட்டிகளால் கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பல விறுவிறுப்பான சேஸிங், லோ ஸ்கோரிங் மேட்ச்சஸ் என கலைகட்டியுள்ள மகளிர் பிரீமியர் லீக் தொடரில், ஷபாலி வெர்மா தன்னுடைய அபாரமான பேட்டிங் திறமையால் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாது, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பாராட்டையும் பெற்றுவருகிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு, உடன் விளையாடும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனும், ஆஸ்திரேலிய அணியின் சர்வதேச கேப்டனுமான மேக் லேன்னிங், இந்தியாவின் இளம் வீராங்கனையான ஷபாலி வெர்மாவை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

15 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை கைப்பற்றிய மரிசான் கேப்!

தொடரின் 9ஆவது போட்டியாக குஜராத் ஜியண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜியண்ட்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் மரிசான் கேப்பின் அபாரமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 105 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய மரிசான் கேப் 4 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

கிரவுண்டின் நாலாபுறமும் சிக்சர் மழை பொழிந்த ஷபாலி! ரசித்து பார்த்த மேக் லேன்னிங்!

106 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷபாலி வெர்மா மற்றும் மேக் லேன்னிங் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். மேக் லேன்னிங் ஒரு கட்டத்தில் அடித்து ஆடாமல் சிங்கிள் தட்டிவிட்டு நான் ஸ்டிரைக்கர் பக்கத்திற்கு சென்றுவிட்டு, ஷபாலியின் அதிரடியான ஆட்டத்தை ரசித்து கொண்டிருந்தார், அந்தளவு ஷபாலி வெர்மா கிரவுண்டின் அனைத்து பக்கத்திலும் வானவேடிக்கை காட்டிக்கொண்டிருந்தார். போட்டியில் 28 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட ஷபாலி 10 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களை பறக்கவிட்டு, 271 ஸ்டிரைக் ரேட்டில் 76 ரன்களை குவித்தார். போட்டியில் வெறும் 7 ஓவர்களை மட்டுமே எதிர்கொண்ட டெல்லி அணி 107 ரன்களை குவித்து, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமான வெற்றியை பதிவு செய்தது.



விமானம் எதுவும் பிடிக்கும் அவசரத்தில் இருந்தீர்களா என கேட்ட ஆங்கர்!-சிரித்தபடி பதிலளித்த மேக் லேன்னிங்!

போட்டிக்கு பிறகு பேசிய டெல்லி கேப்டன் மேக் லேன்னிங்கிடம், விமானம் எதுவும் பிடிக்கும் அவசரத்தில் இருந்தீர்களா என ஆங்கர் கேட்க, அதற்கு சிரித்தபடியே பதிலளித்தார் லேன்னிங். அப்போது பேசிய அவர்,” ஷபாலி அப்படி தான் பேட்டிங் செய்தார். அவரின் பேட்டிங்கை மறுமுனையில் இருந்து பார்ப்பதற்கு அவ்வளவு அருமையாக இருந்தது. நான்-ஸ்டிரைக் பக்கத்திலிருந்து நான் ரசித்துகொண்டிருந்தேன், இதுவரை நான் பார்த்ததிலேயே சில அற்புதமான ஷாட்களை அவர் ஆடினார். அபாரமான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்” என்று புகழ்ந்தார்.

ஷபாலிக்கு என்ன அட்வைஸ் கொடுத்தீர்கள்?

ஷபாலிக்கு களத்தில் என்ன அட்வைஸ் கொடுத்தீர்கள் என கேட்கப்பட்டதற்கு, பதிலளித்த மேக் லேன்னிங்,” அவரிடம் இதைத்தான் சொன்னேன். அவசர படாதே, அமைதியாக உன்னுடைய ஆட்டத்திற்காக காத்திரு, முடிந்தவரை பந்தை நேராக அடித்து விளையாடு என்று கூறினேன். அவரும் அதைத்தான் செயல்படுத்தினார்” என்று கூறினார். மேலும் எதிர்வரும் காலங்களில் அவருடைய இந்த இன்னிங்ஸானது, அவருக்கு நிறைய கான்ஃபிடண்ட் கொடுக்கும் என்று கூறினார்.

மேக் லேன்னிங் அட்வைஸ் சிறப்பாக விளையாட வைத்தது!-ஷபாலி

மேக் லேன்னிங் அட்வைஸ் குறித்து பேசிய ஷபாலி, “கடைசி ஆட்டத்தில் நான் ஃபிலிக் ஷாட் அடிக்க முயற்சித்த போது அவுட்டாகி வெளியேறினேன். அதனால் மேக் லேன்னிங் என்னை ஸ்டிரைட்டாக விளையாடும் படி கூறினார். நான் இந்த போட்டியில் அதை அதிகமாக செய்ய நினைத்தேன். என்னால் சிறப்பாக விளையாட முடிந்தது. மேக்கிற்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். நான் சிக்சர்கள் நிறைய அடிக்கக்கூடிய வீரர், இதையே நான் தொடர்ந்து செயல்படுத்த விரும்புகிறேன். தொடர்ந்து என் திறனை மேம்படுத்தி கொண்டு என் அணிக்காக ரன்களை குவிப்பேன் ”என்று ஷஃபாலி கூறினார்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான மேக் லான்னிங் மற்றும் ஷபாலி வெர்மா இருவரும் அதிக ரன்கள் அடித்தவர்களின் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் இருக்கின்றனர். இருவரும் தலா இரண்டு அரைசதங்களை பதிவு செய்து மேக் 206 ரன்களுடனும், ஷபாலி 179 ரன்களுடனும் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர். ஷபாலி 4 போட்டிகளில் 10 சிக்சர்களை பறக்கவிட்டு, சிக்சர்கள் அடித்தவர்கள் வரிசையி முதல் இடத்தில் இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com