இனிப்பைத் தடவி பந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன்: ஐசிசி புகார், சண்டிமால் மறுப்பு!

இனிப்பைத் தடவி பந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன்: ஐசிசி புகார், சண்டிமால் மறுப்பு!
இனிப்பைத் தடவி பந்தை சேதப்படுத்திய இலங்கை கேப்டன்: ஐசிசி புகார், சண்டிமால் மறுப்பு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் வசமாகச் சிக்கிக்கொண்ட பின்னும் மீண்டும் நடந்திருக்கிறது பந்தைச் சேதப்படுத்திய பஞ்சாயத்து! டெக்னாலஜி எவ்வளவோ முன்னேறிய பின்னும் குறுக்கு வழியில் வீரர்கள் இறங்குவது வேதனைதான் என்கிறார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்.

இலங்கை கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகளுக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடந்துவருகிறது. 

முதல் இன்னிங்ஸில் ஆடிய இலங்கை 253 ரன்களுக்கு ஆல் அவுட். பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்ஸை தொடங்கியது. 2 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்த நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் முடிவடைந்தது. மூன்றாவது நாள் ஆட்டம் நேற்று தொடங்க வேண்டிய நிலையில் இலங்கை வீரர்கள் டிரெஸ்சிங் ரூமில் இருந்து வெளியே வரவில்லை. நடுவர்கள் அலீம் தரும் இயன் கோல்டும் களத்தில் காத்திருந்தனர். வீரர்கள் வராததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

விசாரித்ததில் நடுவர்கள் பந்தை மாற்ற முடிவு செய்ததுதான், இலங்கை வீரர்களின் கோபத்துக்கு காரணம் என்று தெரியவந்தது. வெறும் 44.3 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்ட பந்தை ஏன் மாற்ற வேண்டும் என்று இலங்கை வீரர்கள் போர்க்கொடி தூக்கினர்.

இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை வீரர்கள் பந்தை சேதப்படுத்தியதாக நடுவர்கள் சந்தேகம் அடைந்தனர். அது தொடர்பான வீடியோ காட்சியை பார்த்தனர். அப்போது இலங்கை கேப்டன் தினேஷ் சண்டிமால், தனது பாக்கெட்டில் இருந்து ஒரு இனிப்பை எடுத்து வாயில் போட்டுவிட்டு, பிறகு அதை பந்தின் மீது தேய்ப்பதை நடுவர்கள் பார்த்தனர். இதன் மூலம் அவர் பந்தை சேதப்படுத்தியுள்ளார். இதையடுத்தே பந்தை மாற்ற நடுவர்கள் முடிவு செய்தது தெரிய வந்தது. 

இதுதொடர்பாக போட்டி நடுவர் ஜவகல் ஸ்ரீநாத், இலங்கை பயிற்சியாளர் சந்திகா ஹதுருசிங்கா, கேப்டன் தினேஷ் சண்டிமால், மானேஜர் அசங்கா குருசிங்கா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இலங்கை வீரர்கள் கடும் வாக்குவாதம் செய்தனர். பின்னர் வேறு வழியின்றி பந்தை மாற்றுவதை ஏற்றுக்கொண்டது இலங்கை அணி. இந்தப் பிரச்னை காரணமாக இரண்டு மணிநேரம் போட்டித் தடைபட்டது. பின்னர் போட்டித் தொடங்கியது. இலங்கை அணிக்கு அபராதமாக 5 ரன்கள், வெஸ்ட் இண்டீஸுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியம், ‘எங்கள் வீரர்கள் எந்த தவறும் செய்யவில்லை’ என்று தெரிவித்துள்ளது. இதற்கிடையே இலங்கை கேப்டன் சண்டிமால் மீது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புகார் தெரிவித்துள்ளது. நடத்தை விதிமுறையை மீறி பந்தின் தன்மையை மாற்றியதாக அவர் மீது புகார் கூறியுள்ளது. போட்டியின் முடிவில் சண்டிமாலிடம் விசாரணை நடத்தப்படும். குற்றம் உறுதி செய்யப்பட்டால் அபராதமோ ஓரிரு போட்டிகளில் விளையாட தடையோ விதிக்கப்படும் என்று தெரிகிறது.

இந்நிலையில் இதை மறுத்துள்ளார் தினேஷ் சண்டிமால். ’நான் எந்த தவறும் செய்யவில்லை’ என்று அவர் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com