சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை அணியுடனான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்க அணி 96 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த 3-வது லீக் ஆட்டத்தில், பி பிரிவில் இடம்பெற்றுள்ள தென்னாப்பிரிக்கா- இலங்கை அணிகள் மோதின. இலங்கை கேப்டன் மேத்யூஸ் காயம் காரணமாக ஆடாததால் அவருக்கு பதில் தரங்கா கேப்டனாக செயல்பட்டார்.
டாஸ் ஜெயித்த இலங்கை பீல்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க வீரர்கள் நிதானமாக ஆடினர். தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும் ஆம்லாவும் இறங்கினர். காக், 23 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து ஆம்லாவும், டூ பிளஸ்சிஸ் இணைந்து வலுவான அடித்தளம் ஏற்படுத்தினர். சதம் விளாசிய ஆம்லா 103 ரன்கள் எடுத்தார். டூ பிளஸ்சிஸ் 75 ரன்களும், டூமினி ஆட்டமிழக்காமல் 38 ரன்களும் எடுத்தனர். 50 ஓவர் முடிவில் அந்த அணி, 6 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் எடுத்தது.
300 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் விளையாடிய இலங்கை அணியில் தொடக்க வீரர்களான நிரோஷன் திக்வில்லா 41 ரன்களும், கேப்டன் தரங்கா 51 ரன்களும் எடுத்தனர். குஷால் மெண்டிஸ், சண்டிமால், கபுகேதரா, குணரத்னே உள்ளிட்ட வீரர்கள் குறுகிய இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்ததால், இலங்கை அணி 42-வது ஓவரிலேயே 203 ரன்களுக்கு ஆட்டமிழந்து தோல்வியை தழுவியது. குஷால் பெரைரா 44 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 4 விக்கெட்டுகளை வீழ்த்திய இம்ரான் தாஹிர் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.