சாம்பியன்ஸ் கோப்பை: கணிப்பெல்லாம் கனவா போச்சே!
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்துவருகிறது. இந்தப் போட்டியில். ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பங்களாதேஷ் அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, தென்னாப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் இரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்குள் நுழையும்.
நேற்று நடந்த லீக் போட்டியில் இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் தோல்வியடைந்த ஆஸ்திரேலிய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்தது. அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழக்க மழையும் ஒரு காரணம். மழை காரணமாக 2 ஆட்டத்தில் முடிவில்லாமல் போனது. இதனால் தலா ஒரு புள்ளி கிடைத்தது. ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் வெறும் 2 புள்ளிகளுடன் வெளியேறியது ஆஸி. இந்த அணி தோற்றதால் பங்களாதேஷ் அணிக்கு அரையிறுதி வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் முதன்முறையாக அரையிறுதிக்கு செல்கிறது பங்களாதேஷ்.
பி பிரிவில் இன்று நடைபெறும் போட்டியில் இந்தியா-தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இதில் எந்த அணி வெல்கிறதோ, அந்த அணி அரையிறுதிக்குச் செல்லும். நாளை நடைபெறும் போட்டியில் இலங்கை- பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும்.
இந்த சாம்பியன்ஸ் கோப்பையை பொறுத்தவரை இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் அரை இறுதிக்கு வரும் என்பது பெரும்பாலானவர்களின் கருத்து கணிப்பாக இருந்தது. அந்த கணிப்பு பொய்த்து விட்டது.