அதிர்ச்சி கொடுத்தது பங்களாதேஷ்: வெளியேறியது நியூசிலாந்து

அதிர்ச்சி கொடுத்தது பங்களாதேஷ்: வெளியேறியது நியூசிலாந்து
அதிர்ச்சி கொடுத்தது பங்களாதேஷ்: வெளியேறியது நியூசிலாந்து

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் பங்களாதேஷ் அணி, அபார வெற்றிபெற்றது.

இங்கிலாந்தில் நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று பங்களாதேஷ்- நியூசிலாந்து அணிகள் மோதின. மழை காரணமாக ஒரு மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஞ்ச் (16 ரன்), மார்ட்டின் கப்தில் (33 ரன்) நீண்ட நேரம் நிலைக்கவில்லை. பின்னர் கேப்டன் வில்லியம்சனும், ராஸ் டெய்லரும் இணைந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஒரு கட்டத்தில் அந்த அணி 300 ரன்களை நெருங்கும் என்று நினைத்தனர். இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்ததும் ரன் ரேட்டும் குறைந்தது. வில்லியம்சன் 57 ரன்களிலும் ராஸ் டெய்லர் 63 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். 50 ஓவர் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் சேர்த்தது.

அடுத்து 266 ரன்கள் இலக்கை நோக்கி பங்களாதேஷ் அணி, 33 ரன்கள் எடுப்பதற்குள் தமிம் இக்பால் (0), சபிர் ரகுமான் (8 ரன்), சவுமியா சர்கார் (3 ரன்), முஷ்பிகுர் ரஹிம் (14 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து, பரிதாபத்தில் இருந்தது. ஆனால் ஷகிப் அல்-ஹசனும், மகமுதுல்லாவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நியூசிலாந்தின் பந்துவீச்சை துவம்சம் செய்த, ஷகிப் அல் ஹசன் 7-வது சதத்தையும் மகமுதுல்லா 3-வது சதத்தை பூர்த்தி செய்தனர். இந்த ஜோடி, 5-வது விக்கெட்டுக்கு 224 ரன்கள் குவித்து சாதனை படைத்தது. பங்களாதேஷ் ஜோடி ஒன்று பார்ட்னர் ஷிப்பாக 200 ரன்களுக்கு மேல் எடுத்திருப்பது இதுவே முதல் முறை. ஷகிப் அல் ஹசன் 114 ரன்களும் மகமுதுல்லா 102 ரன்களுடம் எடுத்தனர். பின்னர் அந்த அணி, 47.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 268 ரன்கள் சேர்த்து வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 புள்ளியுடன் அரை இறுதி வாய்ப்பில் பங்களாதேஷ் நீடிக்கிறது. இந்த போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் நியூசிலாந்து, போட்டியை விட்டு வெளியேறியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com