விலகும் வீரர்கள்.. சிக்கலில் இலங்கை ப்ரீமியர் லீக்?

விலகும் வீரர்கள்.. சிக்கலில் இலங்கை ப்ரீமியர் லீக்?
விலகும் வீரர்கள்.. சிக்கலில் இலங்கை ப்ரீமியர் லீக்?

ஐபிஎல் கிரிக்கெட் பாணியில் லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட்டை இலங்கை கிரிக்கெட் வாரியம் நடத்தவிருக்கிறது. எனினும் இந்தத் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட முன்னணி வீரர்கள் விலகி வருவது உள்ளிட்ட பிரச்னைகள் போட்டி அமைப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ், வெஸ்ட் இண்டீஸின் கரீபியன் ப்ரிமீயர் லீக், பாகிஸ்தானின் சூப்பர் லீக் என வர்த்தக ரீதியிலான இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்கள் பல நடத்தப்படுகின்றன. ஆனால் பன்னாடுகளிலும் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பை இந்தப் போட்டித் தொடர்களால் பெறமுடியவில்லை. பிற இருபது ஓவர் கிரிக்கெட் தொடர்களில் இந்திய வீரர்கள் இல்லாதிருத்தலே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் சிலரை உள்ளடக்கி புதிய தொடரை நடத்த தீர்மானித்தது இலங்கை கிரிக்கெட் வாரியம். ஏற்கனவே இந்த முயற்சிகளை மேற்கொண்டு வர்த்தக ரீதியாக தோல்வியடைந்த நிலையில் இந்த முறை தொடரை வெற்றிகரமாக முடிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

இலங்கையின் ஐந்து முக்கிய நகரங்களை மையமாக கொண்டு COLOMBO KINGS, தம்புல்லா ஹாவ்க்ஸ், காலே கிளேடியேட்டர்ஸ், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ், கண்டி டஸ்கர்ஸ் என ஐந்து அணிகள் உருவாக்கப்பட்டன. 75 வெளிநாட்டு வீரர்கள் உள்ளிட்ட 438 வீரர்களை அடையாளம் கண்டு அவர்களிலிருந்து தங்கள் அணிக்கான வீரர்களை நிர்வாகிகள் தேர்வு செய்தனர். இந்தியாவிலிருந்து நட்சத்திர வீரர்களை ஒப்பந்தம் செய்வதில் சிக்கல் உள்ள நிலையில், இர்பான் பதான், முனாஃப் படேல் ஆகிய முன்னாள் நட்சத்திரங்களை ஒப்பந்தம் செய்தது இலங்கை கிரிக்கெட் வாரியம்.

 இந்த நிலையில் கிறிஸ் கெய்ல், லசித் மலிங்கா, ரவி போபரா, லியம் பிளங்கட், சர்ஃபராஸ் அஹமது ஆகிய வெளிநாட்டு வீரர்கள் வெவ்வேறு காரணங்களால் எல்பிஎல் தொடரிலிருந்து வெளியேறியுள்ளனர்.

மற்றொரு புறம் இந்தத் தொடருக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த சோகைல் தன்வீர் மற்றும் கனடாவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் ரவிந்தர் பால் சிங் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய வீரர்களின் வெளியேற்றம், கொரோனா அச்சுறுத்தல் இவற்றை இலங்கை ப்ரீமியர் லீக் எப்படி எதிர்கொள்ளப் போகிறது? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com