''9 ஆண்டுகளாக சவால் தரும் ஐசிசி கோப்பை..'' - என்ன சொல்கிறார் ரோகித் சர்மா

''9 ஆண்டுகளாக சவால் தரும் ஐசிசி கோப்பை..'' - என்ன சொல்கிறார் ரோகித் சர்மா
''9 ஆண்டுகளாக சவால் தரும் ஐசிசி கோப்பை..'' - என்ன சொல்கிறார் ரோகித் சர்மா

'9 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருப்பது சவாலானதே' என்கிறார் ரோகித் சர்மா.

ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியாக நாளை (அக்.23) பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இதனிடையே போட்டி நடைபெற உள்ள நாளன்று மெல்பேர்ன் நகரில் 85 முதல் 90 சதவீதம் மழை பொழிவு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். அவர்,  "மழை குறுக்கீடு இருக்கும்போது டாஸ் கொஞ்சம் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. மெல்போர்னில் வானிலை மாறிக்கொண்டே இருக்கிறது. நாளை என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. இரு அணிகளும் 40 ஓவர் வீசி முடிக்க வேண்டும் என்ற ஆவலில் இருக்கிறோம். ஒருவேளை மழை குறுக்கீடு காரணமாக ஓவர்கள் குறைக்கப்பட்டால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். 10 ஓவரோ 5 ஓவரோ அதை எப்படி நிர்வகிப்பது என்பது வீரர்களுக்குத் தெரியும். இந்தியாவில் 8 ஓவர் போட்டி விளையாடி இருக்கிறோம். அந்த அனுபவம் கைக்கொடுக்கும்.

ஐசிசி போட்டிகளில் முதலிடம் பெறுவது எங்களுக்கு நிச்சயமாக சவாலாக உள்ளது. ஆம், ஐசிசி போட்டிகளில், குறிப்பாக பெரிய தொடர்களில் நாங்கள் காட்ட விரும்பும் செயல்திறன் எங்களிடம் இல்லை. ஆனால் இப்போது இங்கு சிறப்பாகச் செயல்படுவதற்கான வாய்ப்பு எங்களுக்கு உள்ளது, எனவே அதைச் சரியாகப் பெற சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன். 9 ஆண்டுகளாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருப்பது சவாலானதே. நாம் கடைசியாக 2013இல் கோப்பையை வென்றோம். இந்திய அணியினரிடமிருந்து நிறைய எதிர்பார்ப்புகள் உள்ளன. நிச்சயமாக அதில் கொஞ்சம் ஏமாற்றம்தான். இந்தப் போட்டி அதை மாற்றுவதற்கும் சிறப்பாகச் செயல்படுவதற்கும் எங்களுக்கு அந்த வாய்ப்பைத் தருகிறது'' என்றார்.

கடைசியாக 2013இல் தோனி தலைமையில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பிறகு வேறு எந்த ஐசிசி கோப்பையையும் இந்திய அணி வெல்லவில்லை.  அதன் பிறகு இந்திய அணி இரண்டு முறை ஐசிசி பட்டத்தை வெல்வதற்கு அருகில் வந்தும் வெல்ல முடியவில்லை.  ஐசிசி 2017 சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப் போட்டியிலும், ஐசிசி உலகக் கோப்பை 2019-ன் அரையிறுதியிலும் தோல்வியை சந்தித்தது.  2021 உலக கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திடம் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினர். ஆனால், இம்முறை எப்பாடு பட்டாவது கோப்பை தன் வசமாக்கும் முனைப்புடன்தான் இருக்கிறது இந்தியா.

இதையும் படிக்கலாமே: இந்தியா-பாகிஸ்தான் போட்டி மழையால் பாதிக்குமா? - ஆட்டம் ரத்தானால் பலத்த நஷ்டம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com