சாஹல் சுழலில் சுருண்டது ஆஸி: இந்திய அணிக்கு 231 ரன் இலக்கு!
இந்தியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 230 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. சுழல் பந்துவீச்சாளர் சாஹல் 6 விக்கெட் டை வீழ்த்தினார்.
இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை முதல்முறையாக வென்று சாதனை படைத்த இந்திய அணி, அடுத்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும், 2-வது ஆட்டத்தில் இந்திய அணியும் வெற்றி பெற்றன. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3-வது ஒரு நாள் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. இந்திய அணியில் தமிழக வீரர் விஜய் சங்கருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ள து. இது அவருக்கு முதல் ஒரு நாள் போட்டி. ராயுடு, குல்தீப், முகமது சிராஜ் ஆகியோர் நீக்கப்பட்டு, கேதர் ஜாதவ், சாஹல் சேர்க்கப்பட்டனர்.
ஆஸ்திரேலிய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பேரன்டோர்ஃபுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு அவர் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் லியானுக்கு பதிலாக, ஸ்டான்லேக், ஆடம் ஜம்பா சேர்க்கப்பட்டனர்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராத் கோலி பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஒவரின் இரண்டாவது பந்திலேயே மழை குறுக்கிட்டது. சிறிது நேரத்துக்குப் பிறகு போட்டி தொடங்கியது. ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் கேரியின் விக்கெட்டை, மூன்றாவது ஓவரில் புவனேஷ்வர்குமார் சாய்த்தார். அவர் 5 ரன்னில், ஸ்லிப்பில் நின்ற விராத்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இதையடுத்து மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் பின்ச் உடன் உஸ்மான் கவாஜா இணைந்தார். அணியின் ஸ்கோர் 27 ஆக இருந்த போது, பின்ச் விக்கெட்டையும் புவனேஷ்வர் குமார் வீழ்த்தினார். அடுத்து ஷான் மார்ஷ் வந்தார். அவரும் கவாஜாவும் நிதானமாக ஆடினார். அணியின் ஸ்கோர் 100 ஆக இருந்த போது, சாஹல் சுழலில் தோனியால் ஸ்டம்ப்ட் செய்யப்பட்டார் மார்ஷ். அவர் 39 ரன் எடுத்தார்.
பின்னர் ஹேண்ட்ஸ்கோம்ப், கவாஜாவுடன் சேர்ந்தார். அதே ஓவரின் நான்காவது பந்தில் கவாஜாவையும் வீழ்த்தினார், சாஹல். இதனால் அந்த அணி, 101 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது தடுமாறியது. பின் ஹேண்ட்ஸ்கோம்புடன் ஸ்டோயினிஸ் இணைந்தார். 29 ஓவரில் ஸ்டோயினிஸ் விக்கெட்டையும் சாஹல் தூக்கினார். அவர் 10 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த மேக்ஸ்வெல், முகமது ஷமியின் ஷார்ட் பிட்ச் பந்தை தூக்கியடிக்க, அது புவனேஷ்வர்குமார் கையில் தஞ்சமடைந்தது. அவர் 26 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து வந்த ரிச்சர்ட்சனை (16ரன்) சத்தம் போடாமல் சாய்த்தார் சாஹல். ஒரு பக்கம் விக்கெட் விழுந்து கொண்டிருந்தாலும் பொறுமையாக ஆடிய ஹேண்ட்ஸ்கோம்ப், அரை சதம் அடித்தார். அவர் 58 ரன் எடுத்திருந்தபோது, அவரை எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழக்கச் செய்தார் சாஹல். அடுத்து வந்த ஸ்டான்லேக்கை முகமது ஷமி போல்டாக்க, ஆஸ்திரேலிய அணி 48.4 ஓவர்களில் 230 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
கடந்த சில போட்டிகளில் அணியில் இடம் பிடிக்காத சாஹல், 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். புவனேஷ்வர்குமார், ஷமி தலா 2 விக்கெட் டையும் வீழ்த்தினர்.
231 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி அடுத்து களமிறங்கியுள்ளது. தவானும் ரோகித் சர்மாவும் ஆடி வருகின்றனர்.