பேஸ் ஆப் மூலம் ரோகித் சர்மாவைப் பெண்ணாக மாற்றிய சாஹல்! - களைகட்டிய ட்விட்டர்
இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சாஹல், துணை கேப்டன் ரோகித் சர்மா பெண் போல இருக்கும் "பேஸ்ஆப்" புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுக் கிண்டலடித்துள்ளார்.
கடந்த சில நாள்களாக சமூக வலைத்தளங்களில் "பேஸ்ஆப்" என்ற செயலி மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தச் செயலியை வைத்து ஆண்களின் முகத்தைப் பெண்ணாகவோ, பெண்ணின் முகத்தை ஆணாகவோ மாற்றிக்கொள்ளலாம். இது மிகவும் நகைச்சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதால் பலரும் அதனைப் பயன்படுத்தி தங்களது மாற்றுத் தோற்ற புகைப்படத்தை பேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கிரிக்கெட் வீரர் சாஹல், சக வீரர்களைக் கிண்டலடிப்பதில் வல்லவர். அதுவும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர். அவர் இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டன் ரோகித் சர்மாவின் புகைப்படத்தை, பெண்ணாக மார்பிங் செய்து அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை ரோகித் சர்மாவுக்கு டேக் செய்து " ரோகித் ஷர்மா… நீங்க செம க்யூட்டாக இருக்கிறீர்கள்" என்று கேலியாகப் பதிவிட்டுள்ளார்.
இதேபோல அண்மையில் ரோகித் சர்மாவும், சாஹலை கலாய்க்கும் வகையில் ஒரு போட்டோ பகிர்ந்திருந்தார். அந்தப் படத்தில் சாஹல் மிக லூசாக இருந்த டி-ஷர்ட் ஒன்றை அணிந்திருந்தார். அதைச் சுட்டிக்காட்டி ரோகித், "துணிக்கு உள்ளே நீ இருக்கிறாயா, அல்லது உனக்குள் துணி இருக்கிறதா" என்று கேலியாகப் பதிவிட்டிருந்தார்.