வாரி வழங்கிய சேஹல்: வசமாக விளாசிய தென்னாப்பிரிக்கா!

வாரி வழங்கிய சேஹல்: வசமாக விளாசிய தென்னாப்பிரிக்கா!

வாரி வழங்கிய சேஹல்: வசமாக விளாசிய தென்னாப்பிரிக்கா!
Published on

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய, சுழல்பந்துவீச்சாளர் சேஹல் வாரி வழங்கிய ரன்கள்தான் காரணம் என கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரை 5-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இப்போது விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. இரண்டாவது போட்டி, செஞ்சூரியனில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது. 

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி, மனிஷ் பாண்டே, தோனி ஆகியோரின் அதிரடியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது.

பின்னர் ஆடிய தென்னாப்பிரிக்க அணி, கேப்டன் டுமினி, விக்கெட் கீப்பர் கிளாசன் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.

இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் ஆல் ரவுண்டர் கிறிஸ் மோரிஸ், ரன்களை வாரி வழங்கினார். இவர் ஓவரில் இந்திய வீரர்கள், பவுண்டரிகளையும் சிக்சர்களையும் எளிதாக விளாசினர். அவர் 4 ஓவர்களில் 42 ரன்களைக் கொடுத்தார்.

இதே போல இந்திய அணியில் சுழற்பந்துவீச்சாளர் சேஹல், ரன்களை வாரி வழங்கினார். முந்தைய போட்டிகளில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்திய அவரால் நேற்றைய போட்டியில் சரியாகச் செயல்பட முடியவில்லை. அவர் 4 ஓவர்களில் 64 ரன்களை அள்ளிக் கொடுத்தார். அதோடு எளிதான கேட்ச் வாய்ப்பையும் கோட்டை விட்டார். இதனாலேயே இந்திய அணி, நேற்றைய போட்டியில் தோல்வியைத் தழுவியது. 

தோனி, இந்தப் போட்டியில் அடித்த 52 ரன், அவரது இரண்டாவது டி20 அரை சதம் ஆகும். இதற்கு முன் 2017-ல் இங்கிலாந்து எதிராக அவர் 56 ரன்கள் எடுத்திருந்தார். அந்தப் போட்டியில் சேஹல், 25 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டை சாய்த்தார். நேற்றைய போட்டியில் விக்கெட் இன்றி 64 ரன்களை வாரி வழங்கினார் சேஹல். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com