சிசிஎல் 2023: சென்னை அணியில் மீண்டும் விஷ்ணு விஷால், விக்ராந்த் - வைரலாகும் புகைப்படங்கள்!

சிசிஎல் 2023: சென்னை அணியில் மீண்டும் விஷ்ணு விஷால், விக்ராந்த் - வைரலாகும் புகைப்படங்கள்!
சிசிஎல் 2023: சென்னை அணியில் மீண்டும் விஷ்ணு விஷால், விக்ராந்த் - வைரலாகும் புகைப்படங்கள்!

சினிமா பிரபலங்கள் கலந்துகொள்ளும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்கின் 9-வது சீசனில் கலந்துகொள்வதற்காக தமிழ் சினிமாவை சேர்ந்த நட்சத்திரங்கள் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

சிசிஎல் (CCL) என்றழைக்கப்படும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் போட்டியின் 9-வது சீசன் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் இந்த கிரிக்கெட் லீக்கில் கலந்துகொள்ளவுள்ளனர். வருகிற 18-ம் தேதி பெங்களூருவில் தெலுங்கு வாரியர்ஸ் மற்றும் கேரளா ஸ்டிரைக்கர்ஸ் இடையே முதல் போட்டி பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இதில் சென்னை ரைனோஸ் அணி சார்பில் கேப்டன் ஆர்யா தலைமையில், பரத், ஜீவா, விஜய் யேசுதாஸ், பிரித்விராஜ், ஆதவ் கண்ணதாசன், சாந்தனு உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபல நடிகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கடந்த 2017-ம் ஆண்டுக்குப் பிறகு சென்னை ரைனோஸ் அணியிலிருந்து விலகிய விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இந்த சீசனில் மீண்டும் இணைந்துள்ளனர். கிரிக்கெட் லீக்கில் கலந்துகொள்வதற்காக நடிகர்கள் சென்றபோது சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் பரத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சென்னை ரைனோஸ் அணி முதல் இரண்டு முறை சிசிஎல் கோப்பைகளை வென்றதுடன், 2015-ம் ஆண்டில் இரண்டாம் இடம் பிடித்திருந்தது.

தற்போது நடைபெற உள்ள 9-வது சீசனில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. தெலுங்கு வாரியர்ஸ் (கேப்டன் - அகில் அக்கினேனி), பஞ்சாப் (கேப்டன் - சோனு சூட் ), மும்பை ஹீரோஸ் (ரித்தேஷ் தேஷ்முக்), கேரளா ஸ்டிரைக்கர்ஸ் (கேப்டன் - குஞ்சாக்கோ போபன்), கர்நாடகா புல்டோசர்ஸ் (கேப்டன் - சுதீப்), சென்னை ரைனோஸ் (கேப்டன் - ஆர்யா), போஜ்புரி தபாங்ஸ் (கேப்டன் - மனோஜ் திவாரி), பெங்கால் டைகர்ஸ் (கேப்டன் - ஜிஷு). 

இதில் சென்னை ரைனோஸ் அணி, பிப்ரவரி 18-ம் தேதி மாலை 7 மணிக்கு இரண்டாவதாக நடக்கும் போட்டியில், கர்நாடகாவுடன் பெங்களூருவில் மோதவுள்ளது. அதன்பிறகு ஜெய்பூரில் பிப்ரவரி 25-ம் தேதியும், மார்ச் 4-ம் தேதி ஹைதராபாத்திலும், மார்ச் 11-ம் தேதி சென்னையிலும் மோதவுள்ளது. மொத்தம் 16 போட்டிகள் நடத்தப்படுகிறது. லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இரு அரையிறுதிப் போட்டிகள் வரும் 18ம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகின்றன. புள்ளிப்பட்டியலில் முறையே 1 மற்றும் 4-வது இடத்தைப் பிடித்த அணிகள் முதல் அரையிறுதியிலும், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் இரண்டாவது அரையிறுதியிலும் நேருக்கு நேர் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 19ம் தேதி ஹைதராபாத்தில் நடக்கும் இறுதிப் போட்டியில் மோதுகின்றன.

பல்வேறு திரையுலகை சேர்ந்த அனைத்து திரை நட்சத்திரங்களையும் ஒரே இடத்தில் காண முடியும் என்பதால், ரசிகர்கள் இடையேயும் இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com