'ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை' -ரோகித் சர்மா, விராட் கோலிக்கு கவுதம் கம்பீர் அட்வைஸ்

'ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை' -ரோகித் சர்மா, விராட் கோலிக்கு கவுதம் கம்பீர் அட்வைஸ்
'ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை' -ரோகித் சர்மா, விராட் கோலிக்கு கவுதம் கம்பீர் அட்வைஸ்

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது என ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை அறிவுறுத்தியுள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நெருங்கி வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அதற்காக தீவிரமாக தயாராகி வருகிறது. கடைசியாக 2011ஆம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணி ஒரு உலகக் கோப்பையை கூட வெல்லவில்லை. இதனால், இம்முறை சொந்த மண்ணில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பையை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருக்கிறது.

ஒருநாள் உலகக் கோப்பை தொடரை பொறுத்தவரையில் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி மீதே அத்தனை கவனமும் குவிந்துள்ளது. மூத்த வீரர்கள் என்கிற முறையில் அவர்கள் மீது அழுத்தமும் எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக ஓய்வு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ளார் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.

இதுகுறித்து கம்பீர் பேட்டி ஒன்றில் கூறுகையில், ''விராட் கோலி, ரோகித் சர்மா யாராக இருந்தாலும் உங்களுக்கு உலகக்கோப்பை வேண்டும் என்றால் நீங்கள் ஓய்வு எடுக்கக் கூடாது. அப்போதுதான் அனைவரும் நிலையான கிரிக்கெட்டை  விளையாட முடியும். உலகக்கோப்பை தொடங்குவதற்கு குறுகிய காலமே உள்ள நிலையில் நீங்கள் பல மாற்றங்களைச் செய்யத் தொடங்குகிறீர்கள். அது ஒருபோதும் வேலைக்கு ஆகாது. கடந்த இரண்டு உலகக் கோப்பை தொடர்களில் அதுதான் நடந்தது. எனவே, ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்னதாக தோழர்கள் அதிக ஓய்வு எடுக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்" என்று அவர் கூறினார்.

2023ஆம் ஆண்டின் முதல் தொடராக இந்திய அணி இலங்கையை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெறவுள்ளது. இதில் டி20 போட்டிகள் ஜனவரி 3, 5, 7ம் தேதிகளிலும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் ஜனவரி 10, 12, 15ம் தேதிகளிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன. இதில் முதலாவதாக நடைபெறும் டி20 தொடரில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, கேஎல்  ராகுல் உள்ளிட்ட சீனியர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் சூரியகுமார் யாதவ், இசான் கிசான் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com