’ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு ஏன்?’ - வெங்கடேஷ் பிரசாத் Vs சோப்ரா! முற்றும் கருத்து மோதல்!

’ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு ஏன்?’ - வெங்கடேஷ் பிரசாத் Vs சோப்ரா! முற்றும் கருத்து மோதல்!
’ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பு ஏன்?’ - வெங்கடேஷ் பிரசாத் Vs சோப்ரா! முற்றும் கருத்து மோதல்!

சரியாக விளையாடாத போதும், இந்திய அணியில் கே.எல்.ராகுலிற்கு தொடர்ச்சியாக வழங்கப்படும் வாய்ப்புகளுக்கு எதிராகவும், ஆதரவாகவும் முன்னாள் இந்திய வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இருந்துவரும் கே.எல்.ராகுல், அவருடைய பழைய பேட்டிங் ஃபார்மை மீண்டும் எடுத்துவர முடியாமல் தவித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு வரை அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக இருந்துவந்த ராகுல், அறுவை சிகிச்சைக்கு பிறகு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறி வருகிறார்.

இந்நிலையில், கே.எல்.ராகுலின் திறமை மீது நம்பிக்கை வைத்திருக்கும் இந்திய அணி நிர்வாகம், மீண்டும் மீண்டும் அவருக்கே வாய்ப்புகளை வழங்கி வருகின்றது.

இந்திய முன்னாள் வீரர்களுக்கு இடையே முற்றிய மோதல்!

பல வீரர்கள் வாய்ப்புகள் கிடைக்காமல் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையில், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல், சொதப்பிகொண்டே இருக்கும் கே.எல்.ராகுலிற்கு எதற்காக இத்தனை வாய்ப்புகள் என்று, பல முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் முக்கியமாக முன்னாள் இந்திய வேகப்பந்துவீச்சாளரான வெங்கடேஷ் பிரசாத பகிரங்கமாக ராகுலை விமர்சித்தார்.

வெங்கடேஷ் பிரசாத்தின் கருத்திற்கு பதிலளித்திருந்த முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, ராகுல் மீண்டுவருவதற்கு அவருக்கான நேரத்தை கொடுங்களேன் என ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில், இந்தியா அணி மீண்டும் அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் ராகுலை தக்கவைத்துள்ள நிலையில், தற்போது இரண்டு முன்னாள் வீரர்களுக்கும் இடையே மோதல் அதிகமாகியுள்ளது.

20 வருடத்தில் இத்தனை வாய்ப்புகள் யாருக்கும் வழங்கப்படவில்லை! - வெங்கடேஷ் பிரசாத்

முன்னதாக ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த வெங்கடேஷ் பிரசாத், “கே.எல்.ராகுலின் மோசமான ஆட்டம் தொடர்ந்துகொண்டே தான் இருக்கிறது. அவர் கிடைக்கும் வாய்ப்புகளுக்காக எதையும் செய்வது போல் தெரியவில்லை. கடந்த 20 வருடங்களில், இவ்வளவு மோசமான சராசரியை வைத்திருக்கும் எந்த வீரருக்கும், இத்தனை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. வெளியில் ராகுலை விட சிறப்பான சராசரியுடன் இருக்கும் ஷிகர் தவான், அஜிங்யா ரகானே, சர்பராஸ் கான், சுப்மன் கில் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படாதது, நீதியை சோதிக்கிறது” என்று கூறியிருந்தார்.

வெங்கி பாய், ராகுலிற்கான நேரத்தை அவருக்கு கொடுங்களேன்! - ஆகாஷ் சோப்ரா

வெங்கடேஷ் பிரசாத்தின் தொடர்ச்சியான விமர்சனங்களுக்கு பிறகு, அவருடைய ஒரு ட்வீட்டிற்கு பதிலளித்திருந்த முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, “ வெங்கி பாய், குறைந்த பட்சம் 2 டெஸ்ட் போட்டிகள் முடியும் வரையாவது அவருக்கு அவகாசம் கொடுங்களேன். நாம் எல்லோரும் ஒரே அணியில் இருக்கிறோம், அதாவது இந்திய அணியில் இருக்கிறோம். உங்களுடைய எண்ணங்களை வெளிப்படுத்த வேண்டாம் என கூறவில்லை, நமது விளையாட்டு என்பது சரியான நேரத்தில் தான் வெளிப்படும், அவருக்கான நேரம் வரும்வரை அமைதியாக இருங்களேன்” என கூறியிருந்தார்.

1 ரன்னில் வெளியேறிய ராகுல்! அவருக்கு வாய்ப்புகளை வழங்கப்போகிறோம்!- ராகுல் டிராவிட்

முன்னாள் வீரர்களின் கருத்து பரிமாற்றங்களுக்கு இடையே, 114 ரன்கள் என்ற இலக்கை துரத்திய 2ஆவது இன்னிங்ஸில், 1 ரன்னை மட்டுமே எடுத்து வெளியேறினார், ராகுல். இதனால் மீண்டும் அணியில் அவருக்கான இடம் குறித்த கேள்விகள் அதிகமாகின. இந்நிலையில், ராகுல் பற்றி போட்டிக்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் பேசியிருந்த கேப்டன் ரோகித் மற்றும் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், “கடினமான ஆடுகளத்தில் இரண்டு அணியினரும் ரன் குவிக்க தடுமாறினர். நாங்கள் ராகுலின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறோம், அவரை தொடர்ந்து ஆதரிக்க போகிறோம்” என கூறினர்.

ரஹானே சராசரியை பதிவிட்டு, ராகுலின் சராசரியை கேள்வி எழுப்பிய வெங்கடேஷ் பிரசாத்!

ரோகித் மற்றும் டிராவிட் இருவரும் ராகுலை ஆதரிக்கிறோம் என கூறியபிறகு, ட்விட்டரில் பதிவிட்டிருந்த வெங்கடேஷ், “கே.எல்.ராகுல் கடைசி 2 போட்டிகளிலும் விளையாட தக்கவைக்கப்பட்டுள்ளார். ஒருவேளை அவர் ஆடும் அணியில் பங்கேற்று விளையாடினால், அவருக்கு இந்தூர் தான் சிறந்த வாய்ப்பு, அதில் சிறப்பாக விளையாடி, என்னைப்போன்ற விமர்சகர்களை அமைதியாக்க வேண்டும். இல்லையேல் கவுண்டி கிரிக்கெட், உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடி ஃபார்மை மீட்டுகொண்டுவர அணியை விட்டு வெளியேற வேண்டும்” என பகிரங்கமாக பதிவிட்டார்.

மேலும், “ சிலர் கே.எல்.ராகுலின் வெளிநாட்டு சராசரி அதிகம் என கூறுகிறார்கள், ஆனால் புள்ளி விவரங்கள் எதுவும் அப்படி சொல்லவில்லை. அவர் 6 சதங்களை அடித்திருந்தாலும், மற்ற போட்டிகளில் எல்லாம் குறைவான ரன்களையே எடுத்திருக்கிறார். 56 இன்னிங்ஸ்களில் அவருடைய சராசரி வெறும் 30ஆக தான் இருக்கிறது. ஆனால், ஃபார்ம் அவுட் என வெளியேற்றப்பட்ட ரஹானேவின் சராசரி 50 போட்டிகளில் 40+ஆக இருக்கிறது” என 2 வீரர்களின் ஸ்டாட்ஸ் அட்டவனையை பகிர்ந்திருந்தார்.

SENA நாடுகளில் கடந்த 2 வருடங்களில் அணி வீரர்களின் சராசரியை பதிவிட்டு, ராகுலை ஆதரித்த ஆகாஷ் சோப்ரா!

வெங்கடேஷ் பிரசாத்தின் பதிவிற்குபிறகு, ”SENA நாடுகளில் கடந்த 2 வருடங்களில் இந்திய வீரர்களின் சராசரியை பதிவிட்டு, இதனால் தான் கேப்டன் ரோகித்தும், தலைமை பயிற்சியாளர் டிராவிட்டும் ராகுலை ஆதரித்துள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார். அதில் அதிக போட்டிகளில் விளையாடி சிறப்பான் சராசரியுடன் ராகுல் தான் இருக்கிறார்.

மேலும், அவருடைய யூ-ட்யூப் சேனலில் வீடியோவில் பேசியிருக்கும் ஆகாஷ் சோப்ரா, “கே.எல்.ராகுலின் வெளிநாட்டு சாதனையானது முற்றிலும் சாதாரணமானது என்று வெங்கடேஷ் பிரசாத் கூறியுள்ளார். அவரின் சதங்களை மட்டும் பார்க்காதீர்கள், அதைத் தவிர வேறு ரன்களை அவர் எடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார். அவருடைய எண்ணம் முற்றிலும் தவறானது, சச்சின் டெண்டுல்கரின் சதங்களை புறக்கணித்துவிட்டு, அவருடைய டக் அவுட்களை மட்டும் கணக்கில் எடுத்து கருத்து சொல்ல முடியுமா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்நிலையில் ரசிகர்கள் ஆகாஷ் சோப்ராவை உங்களுடைய பெயரை ”பிஆர் கேஎல் ஆகாஷ்” என மாற்றிக்கொள்ளுங்கள் என்றும், அப்படியானால் இதை பாருங்கள் என கடந்த இரண்டு போட்டிகளில் ராகுலை விட முகமது சமி அதிக சராசரியுடன் இருக்கும் புள்ளி விவரங்களை பகிர்ந்துவருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com