'இவரையே உங்களால சமாளிக்க முடியலையே?' - 2 முறை ஸ்மித்தை போல்டாக்கிய டூப்ளிகேட் அஸ்வின்!

'இவரையே உங்களால சமாளிக்க முடியலையே?' - 2 முறை ஸ்மித்தை போல்டாக்கிய டூப்ளிகேட் அஸ்வின்!
'இவரையே உங்களால சமாளிக்க முடியலையே?' - 2 முறை ஸ்மித்தை போல்டாக்கிய டூப்ளிகேட் அஸ்வின்!

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சை சமாளிக்கும் விதமாக, அஸ்வினை போலவே பந்துவீசும் டூப்ளிகேட் அஸ்வின் ஒருவரை கண்டுபிடுத்து வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறது ஆஸ்திரேலிய அணி.

தீவிர வலைப்பயிற்சியில் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி வரும் பிப்ரவரி 9ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பெரிய சவாலாக அஸ்வின் இருப்பார் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், ஆஸ்திரேலிய அணியில் அதிக இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். இதனாலேயே ஒரு டூப்ளிகேட் அஸ்வினை கண்டுபிடித்து அஸ்வினை எதிர்கொள்ளும் வலைபயிற்சியை, 5 நாட்களுக்கு முன்னதாகவே தொடங்கிவிட்டனர் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள். மேலும், ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களின் “ஸ்லைடு ஸ்பின்னை” எதிர்கொள்ள தனியாக ஆயத்தமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

அஸ்வினை சமாளிக்க டூப்ளிகேட் அஸ்வின் உதவியை நாடிய ஆஸ்திரேலியா!

21 வயது நிரம்பிய மகேஷ் பிதியா என்ற இளம் ஆஃப் ஸ்பின்னரான இவர், ரஞ்சிக்கோப்பையில் பரோடா அணிக்காக அறிமுகமான வீரர். அப்படியே ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரியான பவுலிங் ஆக்சனை கொண்டுள்ளார். இவரது பந்துவீச்சை இன்ஸ்டாக்ராமில் கண்ட ஆஸ்திரேலிய அணி, வலைபயிற்சியில் பந்துவீசுமாறு மகேஷ் பிதியா உதவியை நாடியது.

பெங்களூரில் உள்ள பயிற்சி முகாமிற்கு சென்றுள்ள மகேஷ், அங்கு ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டர்களான ஸ்டீவ் ஸ்மித், லபுசனே மற்றும் டிராவிஸ் ஹெட் போன்ற வீரர்களுக்கு பந்துவீச, அவர்கள் அஸ்வினை எதிர்கொள்ளும் வியூகத்தில் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான வலைப்பயிற்சி அனுபவங்களை பகிர்ந்துள்ளார் மகேஷ் பிதியா. ஆஸ்திரேலிய அணியின் டீம் மேனேஜ்மெண்ட் மகேஷ் பிதியாவின் பந்துவீச்சை ஜனவரி 31ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் பார்த்துள்ளது. அப்படியே அஸ்வினை போலவே பந்துவீசுவதை கண்ட ஆஸ்திரேலியா அணி, அவர் வலைபயிற்சிக்கு பந்துவீச வருவாரா என்று தொடர்பு கொண்டு பேசியுள்ளது. அதற்கு மகேஷ் பிதியா சரியென சொல்லவே அவரை பெங்களூருக்கு வரவழைத்துள்ளது.

அவர்கள் அனைவரும் என்னை அஸ்வின் என்று தான் அழைக்கின்றனர்!

வலைபயிற்சி குறித்து பேசியிருக்கும் மகேஷ் பிதியா, “நான் முதலில் அலெக்ஸ் கேரிக்கு தான் பந்துவீசினேன். அவருக்கு என்னுடைய பந்துவீச்சு பிடித்திருந்தது. அவர் என்னிடம் ”நன்றாக பந்துவீசினாய் அஸ்வின்” என்று கூறினார். அதற்கு பிறகு அனைவரும் என்னை அஸ்வின் என்று தான் அழைத்தனர். அவர்கள் என்னை அஸ்வினை போல் தான் பார்க்கின்றனர்” என்று கூறியுள்ளார்.

ஆச்சரியம் என்னவென்றால் அவருடைய இயற்கையான பவுலிங் ஆக்சனே இதுதானாம்!

பவுலிங் ஆக்சன் குறித்து பேசிய மகேஷ், “ என்னுடைய இயற்கையான பவுலிங் ஆக்சனே இதுதான், நான் அஸ்வின் சாரை காப்பி அடிக்கவில்லை. ஆனால் சில விசயங்களை மட்டும் அஸ்வின் சாரிடம் இருந்து கற்றுக்கொண்டு மெருகேற்றிக்கொண்டேன்” என்று கூறினார்.

ஸ்டீவ் ஸ்மித்தை 2 முறை போல்டாக்கினேன் - அவர் இந்த பையன் எத்தனை முதல்தர போட்டிகளை விளையாடியுள்ளார் என ஆச்சரியமாக கேட்டார்!

நான் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்டரான ஸ்மித்திற்கு பந்துவீசினேன், அது எனக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. அதே நேரம் நான் ”ஸ்மித்திற்கு எதிராக இரண்டு முறை போல்டாக்கினேன். என்னுடைய பந்துவீச்சை கண்டு ஆச்சரியப்பட்ட அவர், இந்த பையன் எங்கிருந்து வருகிறான்? எத்தனை முதல்தர போட்டிகளில் விளையாடி உள்ளான்?” என்று கேட்டார். அவரது விக்கெட்டை கைப்பற்றியது என் நினைவில் தனித்துவமானதாக இருக்கும் என்று கூறியுள்ளார் மகேஷ் பிதியா.

நாதன் லியான் உடன் பேசுவதற்கும், அவருடன் கலந்துரையாடுவதற்கும் ஆவலாக இருக்கிறேன்!

நான் இங்கு வந்து இரண்டு நாட்களாக பந்துவீசி வருகிறேன், ஆனால் இன்னும் நாதன் லியானுடன் பேசும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரிடமிருந்து பந்துவீச்சு குறித்து சில தகவல்களை தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்.

ஒரே நாளில் யார் இந்த மகேஷ் பிதியா என உலகம் தேடிவிட்டது?-நான் உண்மையில் அஸ்வின் சாரை பார்க்க விரும்புகிறேன்!

ஒரே நாளில் யார் இந்த மகேஷ் பிதியா என உலகமே தேடி அலசிவிட்டது. உலகத்திற்கு இப்போது பரிச்சயமான ஒருவராய் மாறி உள்ளார் மகேஷ். அவருக்குள்ளும் இனி அடுத்த சீசன்களில் சிறப்பாக செயல்பட வேண்டும், இந்திய அணியில் விரைவில் இணைய வேண்டும் என்ற எண்ணமும் வந்துவிட்டது. அதற்கு முன்னர் அவர் அவருக்குள் இருக்கும் அஸ்வின் சாரை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். அவரிடம் தன்னுடைய பந்துவீச்சு எப்படி இருக்கிறது என்ற கருத்தை கேட்க நினைக்கிறார். மேலும் அஸ்வின் குறித்து பேசிய மகேஷ், “ அஸ்வின் சாரிடம் இருக்கும் கொஞ்சம் திறமை தனக்குள் இருந்தாலும் தனக்கு அதுவே போதும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com