பிளே ஆஃப்க்கு ரைஸ் ஆகுமா சன்ரைசர்ஸ்! டாஸ் வென்ற மும்பை பவுலிங் தேர்வு!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் 65-வது லீக் ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஐதராபாத் அணி இந்த சீசனில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்விகளுடன் 10 புள்ளிகள் பெற்று 8ஆம் இடத்தில் உள்ளது.
கடைசியாக விளையாடிய 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்து அந்த அணி தடுமாறி வருகிறது. இன்று நடைபெறும் ஆட்டத்திலும் தோற்றால் ஐதராபாத் அணி பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்துவிடும். எனவே அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி களமிறங்குகிறது.
மறுபுறம், மும்பை அணி இந்த தொடரில் இதுவரை விளையாடிய 12 போட்டிகளில் 3 வெற்றி, 9 தோல்விகளுடன் 6 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஏற்கனவே பிளே-ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்துவிட்ட மும்பை அணி இனிமேல் இழக்க எதுவும் இல்லை என்பதால் நெருக்கடியின்றி விளையாடக்கூடும். முந்தைய லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரமான வெற்றியை பதிவு செய்திருந்தது மும்பை. அந்த உத்வேகத்துடன் களமிறங்கும் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தை தவிர்க்க முயற்சிக்கக்கூடும். இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் ஷர்மா பவுலிங்கை தேர்வு செய்தார்.
மும்பை அணியில் இன்று இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. மயங்க் மார்கண்டே மற்றும் சஞ்சய் யாதவ் ஆகிய இரு வீரர்களை புதிதாக களமிறக்குகிறது அந்த அணி. ஐதராபாத் அணியிலும் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. ஷஷாங்கிற்குப் பதிலாக பிரியம் கார்க்கும், மார்கோ ஜான்சனுக்குப் பதிலாக ஃபசல் ஃபரூக்கியும் களமிறங்க உள்ளனர்.
இரு அணிகளின் ஆடும் லெவன்:
சன் ரைசர்ஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, பிரியம் கார்க், கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், ஃபசல்ஹாக் ஃபரூக்கி, உம்ரான் மாலிக், டி நடராஜன்
மும்பை இந்தியன்ஸ்: இஷான் கிஷன், ரோஹித் சர்மா, டேனியல் சாம்ஸ், திலக் வர்மா, ராமன்தீப் சிங், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டிம் டேவிட், சஞ்சய் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ரிலே மெரிடித், மயங்க் மார்கண்டே.

