பாகிஸ்தானுடன் விளையாட இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது: ஐசிசி
பாகிஸ்தான் உடன் இருதரப்பு தொடரில் விளையாடுமாறு இந்தியாவை கட்டாயப்படுத்த முடியாது என்று சர்வதேச கிரிக்கெட் வாரியமான ஐசிசி தெரிவித்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டிக்கு உலக அளவில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இந்த இருநாடுகளுக்கு இடையிலான போட்டியின்போது தான் மைதானத்தில் அதிக அளவில் ரசிகள் கூடுவார்கள். ஆனால், 2008 ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தக்குதலுக்கு இந்தியா பாகிஸ்தான் இடையே முழுமையான கிரிக்கெட் தொடர் இதுவரை நடைபெறவில்லை. 2014 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் படி பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 6 தொடர்களில் விளையாட வேண்டியிருந்தது. இதில் 4 தொடர்கள் பாகிஸ்தானிற்கு இந்தியா சென்று விளையாட வேண்டியது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தரப்பில் இருந்து இருநாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடருக்கு தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் தொடர் தீவிரவாத தாக்குதல்களால் இந்திய அரசு பாகிஸ்தான் உடனான கிரிக்கெட் தொடருக்கு அனுமதி வழங்கவில்லை. இதனிடையே, பாகிஸ்தான் - உலக லெவன் அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் லெவன் அணியில் இந்திய வீரர்கள் யாரும் இடம்பெறவில்லை. இதனால் இந்த தொடரில் இந்திய வீரர்கள் பங்கேற்று இருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்து இருந்தனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங் தோனியின் விளையாட்டினை தங்கள் நாட்டில் காண விரும்புவதாக தெரித்தனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா தயாராக இல்லாதபோது எங்களால் கட்டாயப்படுத்த முடியாது என்று ஐசிசி தலைமை அதிகாரி டேவ் சிச்சர்ட்சன் தெரிவித்தார். லாகூர் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இருதரப்பு தொடர் என்பது இருநாட்டு கிரிக்கெட் சங்கங்கள் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவும், பாகிஸ்தானும் விளையாட வேண்டும் என்று நான் நினைத்தாலும், அவர்களிடையே அரசியல் ரீதியான பதற்றமான சூழல் உள்ளது. சர்வதேச சங்கமான இரு நாடுகளுக்கும் இடையே நடுநிலையாகவே செயல்படும்” என்று கூறினார்.