இன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

இன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?

இன்று கடைசி டெஸ்ட்: ஆறுதல் வெற்றி பெறுமா இந்திய அணி?
Published on

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. தொடரை 3-1 என்ற கணக்கில் இழந்த போதும் ஆறுதல் வெற்றியுடன் தொடரை நிறைவு செய்யும் நோக்கத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.

இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் தோற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியில் அபார வெற்றி பெற்றது. சவுதாம்டனில் நடந்த நான்காவது போட்டியில் வெற்றியின் அருகே சென்று தோல்வியை தழுவியது. இதையடுத்து இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் தோல்வி கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

இந்திய அணியில் கேப்டன் விராத் கோலி தவிர வேறு யாரும் நிலைத்து நின்று ஆடவில்லை. அவர் இந்த தொடரில் 2 சதம், 3 அரைசதம் உள்பட 544 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 59 ரன்கள் எடுத்தால், இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சிறப்பை (ராகுல் டிராவிட் 602 ரன் எடுத்துள்ளார்) பெறுவார். 
 
இவரை அடுத்து, கடந்த போட்டியில் மட்டும் புஜாரா அபார சதமடித்தார். அவர் இத்தொடரில் 241 ரன் எடுத்துள்ளார். துணை கேப்டன் ரஹானே 220 ரன் எடுத்துள்ளார். மற்றவர்கள் சொல்லிக்கொள்ளும்படி ஆடவில்லை. 

இதனால் இன்றை போட்டியில் அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருக்கிறது. சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் காயமடைந்துள்ளார். அதனால் அவருக்கு பதில் ஜடேஜா களமிறங்குவார் என்று தெரிகிறது.

தொடக்க ஆட்டக்காரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதால் கே.எல்.ராகுலுக்குப் பதில் இளம் வீரர் பிருத்வி ஷா சேர்க்கப்படலாம். இல்லை என்றால் ராகுலுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு வழங்கப்படலாம். ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதில் ஹனுமா விஹாரியை டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. முதல் தர போட்டியில் அபாரமான சராசரியை வைத்துள்ள விஹாரி, இங்கிலாந்தில் நடந்த முத்தரப்பு தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனால் அவர் மிடில் ஆர்டரில் ’நின்று’ விளையாடுவார் என்று நம்புகிறது அணி. அவரை இன்னொரு ஸ்பின்னராகவும் பயன்படுத்த அணி நினைக்கிறது. வலை பயிற்சியில் அவர் பந்துவீச்சிலும் ஈடுபட்டார். 

தொடரை இழந்துவிட்டாலும் கடைசி டெஸ்ட்டில் வென்று ஆறுதல் வெற்றியை தேட இந்திய அணி நினைக்கிறது. இதனால் இந்தப் போட்டியில் மாற்றங்கள் கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரம் பிட்சின் தன்மையை பொறுத்தே கடைசி நேரத்தில் வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

(இங்கிலாந்து வீரர் பேர்ஸ்டோவ், பயிற்சியின் போது...)

லண்டன் ஓவல் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 12 டெஸ்ட்டுகளில் விளையாடியுள்ளது. ஒரு வெற்றி, 4-ல் தோல்வி, 7 டிரா கண்டுள் ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி வென்றால் 1986-ம் ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் 2 டெஸ்ட்டுகளில் வெற்றி பெற்ற பெருமை இந்திய அணிக்கு கிடைக்கும். 

இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றி விட்டது. அந்த அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் குக் இந்த போட்டியுடன் ஓய்வு பெறுகிறார் என்பதால் வெற்றியுடன் அவரை வழியனுப்ப இங்கிலாந்து வீரர்கள் நினைக்கின்றனர். இதனால் இந்த போட்டியில் பரபரப்பு இருக்கும் எனத் தெரிகிறது. 

போட்டி இந்திய நேரப்படி, 3.30 மணிக்கு தொடங்குகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com