இந்தியா- நியூசி. கிரிக்கெட்: இன்றைய போட்டியில் இதெல்லாம் நடக்குமா?
இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டத்தில் நியூசிலாந்தும், 2வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பூரில் இன்று நடக்கிறது.
இன்றைய போட்டியில் இந்திய கேப்டன் விராத் கோலி, 83 ரன்கள் எடுத்தால் 9 ஆயிரம் ரன்களை கடந்த ஆறாவது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற சிறப்பை பெறுவார். அவர் இப்போது 8,917 ரன்கள் குவித்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், அசாரூதின், தோனி ஆகியோர் இந்த ரன்களை கடந்துள்ளனர்.
இன்று நடக்கும் போட்டியில் விராத், 9 ரன்கள் எடுத்தால் இந்த வருடத்தில் சர்வதேசப் போட்டிகளில், 2 ஆயிரம் ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சிறப்பை பெறுவார். அவர் 7 சதம், 8 அரை சதத்துடன் 1,991 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றால், இந்தியாவில் ஒரு நாள் தொடரை கைப்பற்றியதில்லை என்ற வரலாற்றை அந்த அணி மாற்றும்.
இன்று போட்டி நடக்கும் கிரீன் பார்க் மைதானத்தில் 13 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறது, இந்திய அணி. இதில், 9-ல் வென்று, 4-ல் தோல்வியை தழுவி இருக்கிறது. இதில், 7 போட்டிகளை சேஸிங்கில் வென்றிருக்கிறது இந்திய அணி.