"வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி கலக்க தயார்" கிறிஸ் கெயில்!
'வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக எந்த இடத்திலும் களமிறங்கி விளையாட தயாராக இருக்கிறேன்' என்று அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடவுள்ளது. முதல் ஆட்டம் மார்ச் 3-ஆம் தேதியும், அடுத்த ஆட்டம் 5-ஆம் தேதியும், கடைசி ஆட்டம் 7-ஆம் தேதியும் நடைபெறவுள்ளன. இந்த 3 ஆட்டங்களுமே ஆன்டிகுவா மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தத் தொடரில் விளையாடவுள்ள 14 போ் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 41 வயதான கிறிஸ் கெயில் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல், பாகிஸ்தான் சூப்பா் லீக் டி20 தொடர் ஆகியவற்றில் சிறப்பாக ஆடியதன் மூலம் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியில் 2 ஆண்டுகளுக்கு பின் இடம்பெற்றுள்ளார் கிறிஸ் கெயில்.
இது குறித்து கிறிஸ் கெயில் "ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்கி விளையாடினேன். என்னை மூன்றாவது இடத்தில் விளையாட வைத்தது பயிற்சியாளர் அனில் கும்பளே. அந்த அணியில் தொடக்க வீரர்களாக மயாங்க் அகர்வால் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். என்னுடைய அனுபவத்தை பயன்படுத்திக்கொள்ளவே அணி நிர்வாகம் என்னை மூன்றாவதாக களமிறக்கியது. அது எனக்கு ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்தது" என்றார்.
மேலும் பேசிய அவர் "நான் சுழற்பந்தையும் சிறப்பாக விளையாடுவேன், வேகப்பந்துவீச்சையும் எளிதாக எதிர்கொள்வேன். அதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி என்னை எந்த இடத்தில் களமிறக்கினாலும் பிரச்னை இல்லை. நான் இப்போதும் சிறந்த வீரராகவே இருக்கிறேன். என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். அதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் இன்னமும் பெஸ்ட்தான்" என தன்னம்பிக்கையாக கூறியிருக்கிறார் கிறிஸ் கெயில்.