சென்னை-மும்பை போட்டியில் ‘பனி’தான் வில்லன் - ஐஐடி பேராசிரியர் புதிர்
ஐபிஎல் தொடரில் முதல் பிளே ஆஃப் போட்டி நாளை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இண்டியன்ஸ் அணிகளுக்கு இடையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. மும்பையிடம் ஏற்கனவே இரண்டு போட்டிகளிலும் தோற்றுவிட்டதால் சென்னை பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நாளை நடைபெறும் போட்டி குறித்து ஐஐடி பேராசிரியர் விக்னேஷ் என்பவர் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் சுவாரஸ்யமான தகவல் ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதாவது, தட்ப வெப்பநிலையை கணக்கிட்டு நாளை போட்டியில் தோனி டாஸ் வென்றால் பேட்டிங் அல்லது பவுலிங் எதனை தேர்வு செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுங்கள் என ஒரு கேள்வியை எழுப்பியுள்ளார்.
அந்தப் பதிவில், “இரவு போட்டியில் பனிப்பொழிவின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். சுழற்பந்துவீச்சாளரால் பந்தினை பிடிமானமாக பிடித்து சுழற்றி வீச முடியாது. ஏனெனில் பந்து ஈரத்துடன் காணப்படும். அதேபோல், வேகப்பந்துவீச்சாளர்களாலும் தாங்கள் விரும்பியபடி பந்துவீச முடியாது. அதனால், ஈரப்பதம் அதிமகாக இருக்கும்போது பந்துவீசுவது சிரமமாக இருக்கும்.
இந்த ஐபிஎல் தொடரில், நாளை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடுகிறது. நாளை இரவு 70 சதவீதம் ஈரப்பதம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. போட்டி தொடங்கும் போது வெப்பநிலை 39டிகிரியாக இருக்கும். அதேபோல், இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கும் போது, 27 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
அதனால், தோனி டாஸ் வென்றால், அவர் பேட்டிங் அல்லது பந்துவீச்சு இரண்டில் எதனை தேர்வு செய்ய வேண்டுமென நீங்கள் பரிந்துரை செய்யுங்கள். உங்களுடைய பதிலை விரிவான தெளிவாக கூற வேண்டும். தெளிவு நியாயமானதாக இல்லையெனில் புள்ளிகள் கிடைக்காது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவிற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதேபோல், பலரும் கல்லூரியில் கற்கும் அறிவினை இதுபோன்ற நடைமுறைக்கு பயன்படுத்துவது சிறப்பானது என்றும் பாராட்டியுள்ளனர்.