இறுதிப் போட்டியில் போராடித் தோல்வியடைந்த பி.வி.சிந்து
துபாயில் நடந்த சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து போராடித்தோற்றார்.
உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப் போட்டி இன்று துபாயில் நடைப்பெற்றது. இதில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஏ பிரிவில் இடம்பெற்றிருந்தார். தனது பிரிவில் தான் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறினார். இதையடுத்து அரையிறுதிப் போட்டியில் சீன வீராங்கனை சென் யுஃபெய்யை வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் துபாயில் இன்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகேனே யமாக்குச்சியை எதிர்த்து சிந்து விளையாடினார். விறுவிறுப்பாக விளையாடிய சிந்து முதல் செட்டை 21-15 என கைப்பற்றினார். இதையடுத்து சரிவை சந்தித்த அவர் இரண்டாவது செட்டை 12-21 என இழந்தார். பின்னர் மூன்றாவது செட்டில் போராடிய அவர், அகேனேவின் சாமத்தியமான விளையாட்டை எதிர்கொள்ள முடியாமல் 21-19 போராடித் தோல்வி அடைந்தார். இதனால் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் கோப்பையை அவர் பறிகொடுத்தார்.