மும்பை இண்டியன்ஸ் சோகம்: பட்லர் விளாசலில் ராஜஸ்தான் வெற்றி!
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த போட்டியில் மும்பை இண்டியன்ஸ் அணியை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வென்றது.
ஐபிஎல் தொடரின் 47-லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ், லெவிஸ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சூர்யகுமார் 9 ரன்னில் இருந்த போது ஆர்ச்சர் பந்தில் கொடுத்த எளிதான கேட்சை கவுதம் கோட்டை விட்டார். பின்னர் அவர் 31 பந்தில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் உனட்கட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். அவர் விக்கெட்டையும் ஆர்ச்சர் எடுத்தார்.
மறுமுனையில் ஆடிய லெவிஸ் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் வந்த விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் 12 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினார். கடைசி 2 ஓவரிகளில் ஹர்திக் பாண்டியா 21 பந்தில் 36 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதனால் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்தது.
பின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டியார்ஷி ஷார்ட் மற்றும் ஜாஸ் பட்லர் களமிறங்கினர். ஆரம்பத்திலேயே ஷார்ட், பும்ரா பந்தில் கேட்ச் ஆகி வெளியேற, கேப்டன் ரஹானே பட்லருடன் இணைந்தார். இருவரும் பொறுப்பாக ஆடினர். பட்லர் மும்பை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
ரஹானே 37 ரன்கள் எடுத்திருந்த போது, ஹர்திக் பாண்டியா பந்தில் சூரியகுமாரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின் சஞ்சு சாம்சன், பட்லருடன் கை கோர்த்தார். இருவரும் அதிரடியாக ஆட ராஜஸ்தான் அணி, 18 ஓவர்களிலேயே 171 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜாஸ் பட்லர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 5 சிக்சர், 9 பவுண்டரியுடன் 94 ரன்கள் குவித்தார். அவர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்தப் போட்டியில் மும்பை அணி தோல்வி அடைந்திருப்பதால் அதன் அடுத்தச் சுற்றுக் கனவு மங்கியுள்ளது.