’தனி ஒருவன்’ பட்லர் விளாசலில் பணிந்தது சிஎஸ்கே!

’தனி ஒருவன்’ பட்லர் விளாசலில் பணிந்தது சிஎஸ்கே!

’தனி ஒருவன்’ பட்லர் விளாசலில் பணிந்தது சிஎஸ்கே!
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், தனி ஒருவனாக ஜாஸ் பட்லர் விளாசியதால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 43-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஜெய்ப்பூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ராஜஸ்தான் வீரர்கள் பிங்க் நிற உடையணிந்து விளையாடினர். 

சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வாட்சனும் ராயுடுவும் களமிறங்கினர். ராயுடு 12 ரன்களில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் போல்டாக, அடுத்ததாக ரெய்னா களமிறங்கினார். இந்த ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை சேர்ந்தது. வாட்சன் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் வீழ்ந்தார். ரெய்னாவும் 52 ரன்களில் சோதி சுழலில் பின்னியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

பின்னர் களமிறங்கிய தோனி, சாம் பில்லிங்ஸ் கூட்டணி மிடில் ஓவர்களில் ரன்கள் எடுக்க திணறியது. இறுதிக் கட்டத்தில் எடுத்த முயற்சியால் 20 ஓவர்களில் சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. 

பின்னர் 177 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக, ஜாஸ் பட்லரும் பென் ஸ்டோக்ஸும் களமிறங்கினர். முதல் 4 ஓவர்களில் 48 ரன்கள் குவித்த இந்த கூட்டணி, ஹர்பஜன் சுழலில் பிரிந்தது. பென் ஸ்டோக்ஸ் 11 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹர்பஜன் பந்தில் போல்டானார். அடுத்து வந்த கேப்டன் ரஹானே 4 ரன்களில் பெவிலியனுக்கு திரும்ப, சஞ்சு சாம்சன் பட்லருடன் கை கோர்த்தார். இவர்கள் சிறிது நேரம் நிலைத்து நின்றனர். சாம்சன் 21 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த பிரசாந்த் சோப்ரா 8 ரன்களில் தாகூர் பந்தில் அவுட் ஆனதும் ஸ்டூவர்ட் பின்னி வந்தார். 

ஒரு முனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பட்டையை கிளப்பினார் பட்லர். சிஎஸ்கே-வின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த பட்லர் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஜாஸ் பட்லர் 2 சிக்சர், 11 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

சென்னை அணிக்கு இது 4 வது தோல்வியாகும்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com