இந்தியாவுக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்துள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்தது. அலெஸ்டர் குக் 71, மொயின் அலி ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். பட்லர் 11, ரஷித் 4 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து, இரண்டாவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தொடக்கத்திலே இங்கிலாந்து அணி 214 ரன்கள் எடுத்த போது ரஷித் 15 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதனால், இங்கிலாந்து அணி 250 ரன்னுக்குள் ஆட்டமிழந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பட்லர்-பிராட் ஜோடி ஆட்டத்தையே மாற்றியது. ஒருநாள் போட்டியைப் போல் ஆடி ரன்களை சேர்த்தது. ஒரு ஓவருக்கு சராசரியாக 4 முதல் 5 ரன் எடுக்கப்பட்டது. இங்கிலாந்து அணி 250, 300 ரன்கள் என அடுத்தடுத்து தாண்டி சென்று கொண்டே இருந்தது. பட்லர் 84 பந்தில் அரைசதம் அடித்தார்.
312 ரன்கள் எடுத்த நிலையில் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் பிராட் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். பட்லர் - பிராட் ஜோடி 9வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் குவித்தது. பிராடை தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பட்லர் 89 ரன்னில் அவுட் ஆனார். இவரது விக்கெட்டையும் ஜடேஜா கைப்பற்றினார். இங்கிலாந்து அணி 122 ஓவரில் 332 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. நேற்று 198 ரன்கள் எடுத்த நிலையில், இன்றைய தினத்தில் மீதமுள்ள 3 விக்கெட்களை இழந்து 134 ரன்கள் சேர்த்தது இங்கிலாந்து. 89 ரன்கள் குவித்த பட்லருக்கு இன்று 28வது பிறந்தநாள். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்களை சாய்த்தார். பும்ரா, இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்களை சாய்த்தனர்.
இதனையடுத்து, இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. தொடக்கமே இந்தியாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது. 3 ரன் எடுத்த நிலையில் ஷிகர் தவான் பிராட் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். இந்திய அணி 14 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன் எடுத்தது.