பட்லர் சதம்! சாஹல் அபார பந்துவீச்சு! கொல்கத்தாவுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்

பட்லர் சதம்! சாஹல் அபார பந்துவீச்சு! கொல்கத்தாவுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்
பட்லர் சதம்! சாஹல் அபார பந்துவீச்சு! கொல்கத்தாவுக்கு எதிராக த்ரில் வெற்றி பெற்ற ராஜஸ்தான்

பட்லரின் சதம் மற்றும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை சாய்த்த சாஹலின் மாயாஜால சுழற்பந்து வீச்சால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவுசெய்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

ஐபிஎல் 2022 தொடரின் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பேட்டிங்க்கு சாதகமான மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. கொல்கத்தா வீரர்களின் பந்துவீச்சை தொடக்கத்தில் இருந்தே சிதறடித்த ஜோஸ் பட்லர் 29 பந்துகளில் அரைசதத்தை எட்டினர். இரண்டாவது விக்கெட்டுக்கு களம்வந்த கேப்டன் சாம்சன் தன் பங்குக்கு அதிரடியை காட்ட ரன்ரேட் ஓவருக்கு 11 என்ற அளவில் ஜெட் வேகத்தில் சென்றது.

தொடர்ந்து அசத்திய பட்லர் 59 பந்துகளில் 5 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் சதம் அடித்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் 2ஆவது சதத்தை பூர்த்தி செய்து 103 ரன்னில் பெவிலியன் திரும்பினார் பட்லர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் இதுவரை அதிகபட்ச ஸ்கோரான 217 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணியில் சுனில் நரேனை தவிர மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரிவழங்கினர்.

இமாலய இலக்கை துரத்திச் செல்வதால் தனது பேட்டிங் லைன் அப்பையே மாற்றி அமைத்து களமிறங்கியது. வெங்கடேஷ் அய்யருக்கு பதிலாக சுனில் நரைன் ஓப்பனராக களமிறங்கினார். ஆனால் ரன் கணக்கை தொடங்கும் முன்பே சுனில் நரேன் விக்கெட்டை பறிகொடுத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஆரோன் பிஞ்ச் நிலைமையை உணர்ந்து மிகவும் பொறுப்புடன் விளையாடினர். அனைத்து ஓவர்களிலும் பவுண்டரிகளை இந்த ஜோடி விளாசியதால், ராஜஸ்தானின் வேகத்தை விட அதிவேகத்தில் கொல்கத்தாவின் ஸ்கோர் உயர்ந்தது.

இக்கட்டான சூழலில் களமிறங்கிய இந்த ஜோடி சீரான வேகத்தில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆரோன் பிஞ்ச் 28 பந்துகளில் 53 ரன்களை குவித்து வெளியேறினார். மிகவும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய ஆன்ட்ரே ரஸல், அஸ்வினின் சுழலில் சிக்கி முதல் பந்திலேயே பெவிலியன் திரும்பியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. எனினும் ஸ்ரேயாஸ் களத்தில் இருந்ததால் ஆட்டம் கொல்கத்தா அணியின் பக்கமே இருந்தது.

16 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்து வலுவான நிலையில் இருந்த கொல்கத்தா அணி வெற்றிக்கனியை பறித்துவிடும் என்றே எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில், 17ஆவது ஓவரை வீசிய சாஹல் முதல் பந்தில் வெங்கடேஷ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தினார். அதே ஒவரில் கடைசி 3 பந்துகளில் ஸ்ரேயாஸ், ஷிவம் மாவி, கம்மின்ஸ் ஆகியோரை ஹாட்ரிக் விக்கெட்களாக சாய்த்து போட்டியின் போக்கையே தலைகீழாக மாற்றினார் சாஹல். கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 51 பந்துகளில் 85 ரன்கள் குவித்து அவுட்டாக கொல்கத்தா மீண்டும் தடுமாறத் துவங்கியது.

போட்டி ராஜஸ்தான் வசமாகிவிட்டதாக தோன்றிய கணத்தில், யாரும் எதிர்பார்க்காத வகையில் ட்ரெண்ட் போல்ட் வீசிய 18ஆவது ஓவரை பதம்பார்த்தார் உமேஷ் யாதவ். அந்த ஓவரில் ஒரு பவுண்ட்ரி, இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 20 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்டது. ஒபேத் மெக்காய் வீசிய அந்த ஓவரில் இரண்டாவது பந்தில் ஜாக்சன், 4ஆவது பந்தில் உமேஷ் யாதவ் ஆட்டமிழக்க 7 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றிபெற்றது. சாஹல் தன் மாயாஜால சுழலால் 5 விக்கெட்களை கைப்பற்றினார். ஐபிஎல் வரலாற்றில் ஒரே போட்டியில் சதம், ஒரே வீரர் ஹாட்ரிக் விக்கெட் மற்றும் 5 விக்கெட்களை கைப்பற்றிய சாதனை இப்போட்டியில் நடந்தேறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com