ருதுராஜ்க்கு SPARK வந்துடுச்சு! ஆனால் ஒரு ரன்னில் சதம் “மிஸ்”! 202 ரன்களை குவித்தது சென்னை

ருதுராஜ்க்கு SPARK வந்துடுச்சு! ஆனால் ஒரு ரன்னில் சதம் “மிஸ்”! 202 ரன்களை குவித்தது சென்னை
ருதுராஜ்க்கு SPARK வந்துடுச்சு! ஆனால் ஒரு ரன்னில் சதம் “மிஸ்”! 202 ரன்களை குவித்தது சென்னை

தோனி கேப்டன் பொறுப்பை மீண்டும் ஏற்றுள்ள நிலையில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக விளையாடி சதம் விளாசினார்.

நடப்பு ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்பு கேப்டன் பொறுப்பை துறந்த மகேந்திர சிங் தோனி, அதை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார். ஜடேஜா தலைமையில் சென்னை அணி சோபிக்காத நிலையில் தனது ஆட்டத்தில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கூறி கேப்டன் பொறுப்பை தோனியிடமே திரும்ப ஒப்படைத்துள்ளார் ஜடேஜா. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத்-க்கு எதிராக சென்னை அணி மீண்டும் தோனி தலைமையில் களம் இறங்குகியது. டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியன்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

சென்னை அணியின் ஓப்பனர்களாக ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். மார்கோ ஜான்சன் வீசிய 2வது ஓவரில் ருதுராஜ் சிக்ஸர் விளாசினார். ஏதுவான பந்துகளை மட்டும் பவுண்டரிகளாக ருதுராஜ் மாற்ற, அவருக்கு துணையாக கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். உம்ரான் மாலிக் வீசிய ஓவரில் பவுண்டரிகளை விளாசி அசத்தினார் ருதுராஜ்.

மார்க்ரம் வீசிய ஓவரையும் ருதுராஜ் ஒரு கை பார்க்க, அடுத்து உம்ரான் வீசிய ஓவரில் பவுண்டரி விளாசியபடி 33 பந்துகளில் அரைசதம் கடந்தார். மீண்டும் மார்க்ரம் வீசிய ஓவரில் இரு சிக்ஸர்களை கெய்க்வாட் பறக்கவிட, 11 ஓவர்களில் 100 ரன்களை கடந்தது சென்னை அணி. உம்ரான் வீசிய 3வது ஓவரிலும் ருதுராஜ் பவுண்டரிகளை விளாச, ஐதராபாத் பவுலர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகினர்.

நிதானமாக ஆடி வந்த கான்வே மார்கோ ஜான்சன் வீசிய ஓவரில் சிக்ஸர் விளாசிய படி அரைசதம் கடந்தார். அதன்பின் அவரும் அதிரடியாக விளையாடி சிக்ஸர்களை பறக்கவிட்டார்.புவனேஷ்வர் குமார் தவிர மற்ற அனைவரது ஓவர்களும் இந்த இருவர் கூட்டணியால் பதம் பார்க்கப்பட்டிருந்தது. அதிரடியாக இருவரும் விளையாடிய நிலையில். நடராஜன் வீசிய ஓவரில் 99 ரன்கள் சேர்த்த நிலையில் ருதுராஜ் அவுட் ஆகினார். 6 பவுண்டரி, 6 சிக்ஸர் விளாசி அதகளம் காட்டிய ருதுராஜ் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் அதை ஒரு ரன்னில் தவற விட்டார்.

அடுத்து வந்த தோனி 8 ரன்னில் நடையை கட்ட, கடைசி ஓவரில் கான்வே அதிரடியாக பவுண்டரிகளை விளாசி 200 ரன்களை சென்னை அணி கடக்க வைத்தார். 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 202 ரன்களைக் குவித்தது. கான்வே 8 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் விளாசி 85 ரன்களை குவித்தார். 203 ரன்களை எட்டினால் வெற்றி என்ற இலக்குடன் சன் ரைசர்ஸ் விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com