உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டியில் 5 முறை கோப்பையை வென்ற பிரேசில் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் வீழ்த்தியது. இதனையடுத்து பெல்ஜியம் அணி தனது அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸை எதிர்கொள்கிறது. ரஷ்யாவில் 21 ஆவது பிஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் ஜூன் 14 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
32 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில் லீக் சுற்றுகள் முடிவில் நாக் அவுட்டில் விளையாட 16 அணிகள் தகுதிப் பெற்றது. நாக் அவுட்டில் தேறிய 8 அணிகள் காலிறுதிக் தகுதிப் பெற்று ஒன்றோடு ஒன்று மோதுகின்றது. இதில் நடைபெற்ற முதல் காலிறுதிப் போட்டியில் உருகுவே - பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் 2-0 என்ற கணக்கில் பிரான்ஸ் அணி வென்று அரையிறுதிக்கு முன்னேறியது.
இதனையடுத்து இரண்டாவது காலிறுதிப் போட்டி இரவு 11.30 மணிக்கு பிரேசில் - பெல்ஜியம் இடையே தொடங்கியது. மிகவும் எதிர்பார்ப்புகளுடனும் பரபரப்புகளுடன் தொடங்கியது. தொடக்கம் முதலே பெல்ஜியம் - பிரேசில் என இரு அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆனால் 13வது நிமிடத்தில் பிரேசிலின் பெர்னான்டின்ஹோ சேம் சைடு கோலடிக்க பெல்ஜியம் முன்னிலை பெற்றது. இதற்கு வலு சேர்க்கும் விதமாக ஆட்டத்தின் 31வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் கெவின் டி புருய்னே ஒரு கோல் அடித்தார்.
இதையடுத்து எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் பெல்ஜியம் அணி 2-0 என முன்னிலை வகித்தது.ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் அணி தனக்கு கிடைத்த பல்வேறு வாய்ப்புகளை கோலாக மாற்ற முடியவில்லை. ஆனால் ஆட்டத்தின் 76 ஆவது நிமிடத்தில் பிரேசில் வீரர் ரெனாடோ அகஸ்டோ ஒரு கோல் அடித்தார்.
பின்பு, இறுதி வரை எந்த அணியும் கோல் அடிக்காததால் பெல்ஜியம் 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. பெல்ஜியம் அணி 32 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரை இறுதிக்கு நுழைந்தது, அந்நாட்டு ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால், பிரேசில் அணி வெளியேறியது உலக கால்பந்தாட்ட ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் கால்பந்தாட்டத்தை தங்கள் வாழ்வில் ஓர் அங்கமாக கருதும் தென் அமெரிக்க நாடுகளின் அணிகளில் ஒன்றுக் கூட, இறுதிப் போட்டிக்கு முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.