“16 வருடத்தில் நான்காவது அறுவை சிகிச்சை” - பிராவோவின் ஷாக் பதிவு
தனது காயத்திற்கு அறுவை சிகிச்சை செல்லும் முன்பு இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிரவோ பதிவிட்டுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் நாட்டின் டி20 தொடரான கரிபியன் பிரிமியர் லீக் தொடர் நடைபெறவுள்ளது. இதற்காக தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பிராவோ விளையாடுகிறார். இதற்காக பயிற்சி ஆட்டம் ஒன்று நடைபெற்றது.
இந்தப் பயிற்சி ஆட்டத்தில் பிராவோவின் கை விரலில் காயம் ஏற்பட்டது. இந்தக் காயத்தால் பிராவோ கரிபியன் பிரிமியர் லீக் தொடரிலிருந்து தற்போது வெளியேறியுள்ளார். அத்துடன் இந்தக் காயத்திற்கு பிராவோ அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “16 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் எனது நான்காவது அறுவை சிகிச்சைக்கு செல்லவிருக்கிறேன். இந்த சிகிச்சை நல்ல முறையில் முடிய நான் ஆண்டவனை பிராத்திக்கிறேன். இதற்காக வாழ்த்து தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் எனது நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.