ஐபிஎல்லில் பந்துவீச தடையா - என்ன சொல்கிறார் கேமரூன் கிரீன்?

ஐபிஎல்லில் பந்துவீச தடையா - என்ன சொல்கிறார் கேமரூன் கிரீன்?
ஐபிஎல்லில் பந்துவீச தடையா - என்ன சொல்கிறார் கேமரூன் கிரீன்?

ஐபிஎல் போட்டியில் பந்து வீச தடை என்கிற செய்தி தவறானது என ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக, கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 23ஆம் தேதி, கேரள மாநிலம் கொச்சியில் மினி ஏலம் நடைபெற்றது. இதில் 5 முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பந்துவீச்சாளர் கேமரூன் கிரீனை, 17.50 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. அதிக விலை கொடுத்து எடுக்கப்பட்டவர்களில் இரண்டாவது வீரராகத் தேர்வானவர் கேமரூன் கிரீன் என்பது குறிப்பிடத்தக்கது.

அவரை, மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பலமாகக் கருதப்பட்டது. ஆனால் அவரை, ஏப்ரல் 13 வரை பந்து வீசக்கூடாது என ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவுறுத்தியதாகச் செய்திகள் வெளியாகின. 2023இல் உலகக்கோப்பை நடைபெற உள்ளதால் வீரர்களின் பணிச்சுமையைக் கருத்தில்கொண்டு இத்தகைய முடிவை ஆஸ்திரேலிய நிர்வாகம் எடுத்ததாகவும் சொல்லப்பட்டது.

இதுகுறித்து ஐபிஎல் அணிகளின் ஏலத்திற்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என காரணமும் கூறப்பட்டது. இதனால் ஐபிஎல்லில் அவர் பந்துவீச மாட்டார் எனக் கூறப்பட்டது. இது, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஏமாற்றத்தைத் தந்தது.

இந்த நிலையில், இச்செய்தியை முற்றிலும் கேமரூன் கிரீன் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், ”இதுதொடர்பாக வரும் செய்திகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை. சமீபகாலமாக இப்படியொரு செய்திகள் உலா வருவதை நானும் கவனித்து வருகிறேன். எங்கிருந்து இத்தகைய செய்திகள் வருகின்றன என எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஐபிஎல் தொடங்கும் முன்பு 100 சதவிகிதம் முழு உடற்தகுதியுடன் இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாத இறுதியில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் கேமரூன் விளையாடியபோது கையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த போட்டியில் மட்டுமின்றி தொடரிலிருந்து வெளியேறி, தற்போது ஓய்வெடுத்து வருகிறார். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நடைபெற இருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராஃபி டெஸ்ட் தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இது, அடுத்த மாதம் (பிப்ரவரி) 9ஆம் தொடங்க இருக்கிறது. மொத்தம் 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன. நான்காவது டெஸ்ட் போட்டி மார்ச் 9ஆம் தேதி தொடங்கி, 13ஆம் தேதி நிறைவடைகிறது. இதையடுத்தே ஐபிஎல் சீசன் தொடங்குகிறது. மார்ச் 25ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் சீசனில் மும்பை அணி 26ஆம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com