உலகக் கோப்பை சூப்பர் ஓவர் : டென்ஷனை குறைக்க ஸ்டோக்ஸ் செய்த காரியம்..!

உலகக் கோப்பை சூப்பர் ஓவர் : டென்ஷனை குறைக்க ஸ்டோக்ஸ் செய்த காரியம்..!
உலகக் கோப்பை சூப்பர் ஓவர் : டென்ஷனை குறைக்க ஸ்டோக்ஸ் செய்த காரியம்..!

உலகக் கோப்பை இறுதிப் போட்டி சூப்பர் ஓவருக்கு முன்பு இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் சிகெரெட் பிடித்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்து அணியின் மறக்கமுடியாத நாள் இன்று. கடந்த வருடம் இதே நாளில் நியூசிலாந்து அணிக்கு எதிரான உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் விளையாடிய இங்கிலாந்து அணி முதன்முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. வரலாற்றில் இதுவரை நடக்காத ஒரு உலகக் கோப்பை இறுதிப் போட்டியாக, அப்போட்டி சூப்பர் ஓவர் வரை சென்று சமனில் முடிந்தது. பின்னர் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற கிரிக்கெட் விதியின் அடிப்படையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து அணி அன்று உலகக் கோப்பையை வெல்ல காரணம் யார் ? என்று கேட்டால், கிரிக்கெட் தெரிந்தவர்கள் அனைவரும் கூறும் பெயர் பென் ஸ்டோக்ஸ். இங்கிலாந்து அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவருமே அவுட் ஆகி சென்றபோது களமிறங்கிய ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 98 பந்துகளை சந்தித்து 84 ரன்களை குவித்தார். இறுதி வரை அவுட்டாகாமல் களத்தில் இருந்த அவர் போட்டியை சமன் செய்தார். கண்டிப்பாக இங்கிலாந்து அணி தோற்றுவிடும் என நினைத்த அனைவரும் பென் ஸ்டோக்ஸின் திறமையை கண்டு வாயடைத்துப் போயினர்.

முதல் பேட்டிங்க் செய்திருந்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்திருந்தது. அதே ரன்களை இங்கிலாந்து அணியும் எடுத்து போட்டி சமனாகியதால், சூப்பர் ஓவருக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. போட்டி இங்கிலாந்தின் புகழ் பெற்ற மைதானமான லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றதால் அங்கு கூடியிருந்த இங்கிலாந்து ரசிகர்கள் பென் ஸ்டோக்ஸ் பெயரை கூச்சலிட்டு கொண்டாடினர். சூப்பர் ஓவரில் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் சார்பில் அன்று அரை சதம் அடித்திருந்த பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோர் களமிறக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சூப்பர் ஓவருக்கு முன்பிருந்த சில நிமிடங்கள் இடைவெளியில் பென் ஸ்டோக்ஸ் என்ன செய்தார் ? என்ற தகவல் வெளியாகியுள்ளது. புத்தகம் ஒன்றில் எழுதப்பட்டுள்ள அந்தத் தகவலில், சில நிமிடங்கள் இடைவெளியில் உடை மாற்றும் அறைக்கு சென்ற ஸ்டோக்ஸ், ஷவரில் தலையை நனைத்து தனது டென்ஷனை குறைத்துள்ளார். உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் 2 மணி நேரத்திற்கும் மேல் களத்தில் நின்று மிகவும் நெருக்கடியான நேரத்தில் விளையாடியதால் அவர் மிகுந்த அழுத்தத்தில் இருந்துள்ளார். எனவே தலையை நீரில் நனைத்த பின்னர் அங்கிருந்த தனியறைக்கு சென்று அவர் சிகெரெட் பிடித்ததாக கூறப்பட்டுள்ளது. பின்னர் கேப்டன் இயான் மார்கனிடம் சில வினாடிகள் பேசிவிட்டு களத்திற்கு திரும்பியுள்ளார்.

சூப்பர் ஓவரில் 3 பந்துகளை சந்தித்த ஸ்டோக்ஸ் 8 ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து அணி மொத்தம் 15 ரன்கள் எடுத்திருந்தது. அதே ரன்களை நியூசிலாந்து அணியும் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்து, பின்னர் பவுண்டரிகள் கணக்கீடு முறையில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com