பாபர் சதம் வீண்: ஜேசன் ராய் விளாசலில் தொடரை வென்றது இங்கிலாந்து!
பாகிஸ்தானுக்கு எதிராக நேற்று நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது..
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடிவருகிறது. முதல் ஒரு நாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டிகளில் இங்கிலாந்து அணி, அபார வெற்றி பெற்றது. நான்காவது ஒரு நாள் போட்டி, நாட்டிங்காமில் நேற்று நடந்தது.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது. அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஒவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன் எடுத்தது. பாபர் ஆஸம் 115 ரன் விளாசினார். பஹார் ஜமான் 57, முகமது ஹபீஸ் 59, சோயிப் மாலிக் 41 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து தரப்பில் டாம் கர்ரன் 4 விக்கெட்டுகளும் மார்க் வுட் 2 விக்கெட்டுகளும் ஆர்ச்சர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 341 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 341 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய் 114 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 71 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியை அடுத்து 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில், தொடரை கைப்பற்றியது இங்கிலாந்து அணி.
கடைசி மற்றும் ஐந்தாவது ஒரு நாள் போட்டி, லீட்ஸில் நாளை நடக்கிறது.