இந்தியா-பாக். தொடரை நடத்தலாமா, வேண்டாமா? மத்திய அரசிடம் கேட்கிறது பிசிசிஐ!
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை நடத்துவது தொடர்பாக, தங்கள் நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே எல்லைப் பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையால் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையே கிரிக்கெட் தொடர்கள் நடத்துவது நிறுத்தப்பட்டது. மத்திய அரசு அனுமதி தராமல் கிரிக்கெட் தொடரை நடத்த முடியாது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது.
இதற்கிடையே இருதரப்பு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இந்திய கிரிக்கெட் வாரியம் நிறைவேற்றவில்லை என்றும் இதனால் கடும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் இதற்கு நஷ்ட ஈடாக, 70 மில்லியன் அமெரிக்க டாலரை இந்திய கிரிக்கெட் வாரியம் வழங்க வேண்டும் என்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கோரிக்கை விடுத்தது. இது தொடர்பாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தீர்ப்பாயத் திலும் வழக்குத் தொடர்ந்துள்ளது. இதன் விசாரணை அக்டோபர் 1 முதல் 3-ஆம் தேதி வரை நடக்கும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் இரு நாட்டு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மத்திய அரசு தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த தொடர் நடத்துவதற்காக மத்திய அரசின் முன் அனுமதியை பெற வேண்டுமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. இது தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சகத்துக்கு பிசிசிஐ இமெயில் அனுப்பியுள்ளது.
இதுபற்றி, பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறும்போது, ’வழக்கமாக அனுப்பும் கடிதம்தான் அது. இரு தரப்பு தொடர்பாக அனுமதி கேட்பது எங்கள் கடமை. அதனால் கடிதம் அனுப்பியுள்ளோம்’ என்றார்.