நடக்குமா போட்டி? பாக்.கிற்கு செக் வைத்தது பிசிசிஐ!
பாகிஸ்தானில் நடத்த திட்டமிட்டுள்ள, ஆசிய வளரும் நாடுகள் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு இந்திய அணியை அனுப்ப பிசிசிஐ மறுத்துவிட்டது. இதையடுத்து இந்தத் தொடர் நடத்தப்படுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.
ஆசிய வளரும் நாடுகள் கோப்பை (Asia Emerging Nations Cup) கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானில் அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டிக்கு இந்திய அணியை அனுப்ப, இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துவிட்டது. இதனால் இந்த போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேத்தி கூறும்போது, ‘ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் கொழும்பில் நடைபெற இருக்கிறது. இதில் ஆசிய வளரும் நாடுகளுக்கான கோப்பை போட்டி மற்றும் இந்தியாவில் செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை போட்டி ஆகியவை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். கொல்கத்தாவில் ஏப்ரலில் நடைபெறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் நான் பங்கேற்பது குறித்து இந்திய அரசு விசா அளிப்பதை பொறுத்தே முடிவு மேற்கொள்ளப்படும்’ என்றார்.