தேர்வுக் குழுவுக்கு எதிராக பேசுவதா? முரளி விஜய், கருண் நாயர் மீது பிசிசிஐ நடவடிக்கை!
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தேர்வுக் குழுவினர் பற்றி கருத்து தெரிவித்த முரளி விஜய், கருண் நாயர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இதற்கான இந்திய அணியில் கருண் நாயர், தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் சேர்க்கப்படவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம் பிடித்திருந்த அவர், 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு மோசமான பார்ம் காரணமாக நீக்கப்பட்டார். இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்தும் கருண் நாயருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் அவர் தேர்வுக் குழுவினர் மீது குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல முரளி விஜய்யும் தேர்வு குழு மீது புகார் கூறியிருந்தார்.
‘இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ தொடர்புகொள்ளவில்லை. இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்து இருந்த அணி நிர்வாகிகளிடம் பேசினேன். ’அணி வீரர்கள் தேர்வுக்கு எந்த மாதிரியான அளவுகோல் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது புரியாததாக இருக்கிறது’ என்று ஹர்பஜன்சிங் கூறிய கருத்தை ஒப்புக்கொள்கிறேன். அணியில் இருந்து ஒரு வீரரை நீக்கும் போது அதற்கான காரணத்தை அந்த வீரரிடம் சொல்வது முக்கியம். அப்போதுதான் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதை அறிந்து அதற்கு தகுந்தபடி ஆட்டத்தை மேம்படுத்த முடியும்’ என்று முரளி விஜய் கூறியிருந்தார்.
இதுபற்றி அறிந்த தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத், முரளிவிஜய்யின் பேச்சு ஆச்சரியமாக இருக்கிறது என்று தெரிவித்தார். அவர் கூறும்போது, ’அணியில் இருந்து நீக்கப்படுவது தொடர்பாக, யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்று முரளி விஜய் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது. அவர் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை. தேர்வு குழுவைச் சேர்ந்த தேவங் காந்தி ஏன் அணியில் இடம்பெறவில்லை என்பதை அவரிடம் தெளிவாக எடுத்துரைத்தார். பிறகு எப்படி இதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை’ என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ’அணி தேர்வு பற்றி பேசிய முரளி விஜய், கருண் நாயர் இருவரும் ஒப்பந்தத்தை மீறிவிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரிய ஒப்பந்தப்படி முடிந்த தொடர்கள் பற்றிய கருத்துகளை 30 நாட்களுக்குள் தெரிவிக்கக் கூடாது. ஐதராபாத்தில் வரும் 11 ஆம் தேதி கிரிக்கெட் வாரிய கூட்டம் நடக்கிறது. அங்கு இந்தப் பிரச்னை எழுப்பப்படும்’ என்று கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.