பிசிசிஐக்கு புதிய தலைமை! யார் இந்த ரோஜர் பின்னி?

பிசிசிஐக்கு புதிய தலைமை! யார் இந்த ரோஜர் பின்னி?
பிசிசிஐக்கு புதிய தலைமை! யார் இந்த ரோஜர் பின்னி?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரோஜர் பின்னி. இப்போதுள்ள இளம் தலைமுறையினருக்கு ரோஜர் பின்னி யார் என்று பெரிதும் தெரிந்திருக்க கூடிய வாய்ப்பில்லை. அதனால் அடுத்த சில ஆண்டுகளுக்கு உலகின் மிக வலிமையான கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருக்கபோகும் ரோஜர் பின்னி குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம்.

ஆங்கிலோ இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் ரோஜர் பின்னி. 19 ஜூலை 1955 ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தார். ஆல் ரவுண்டரான பின்னி இந்தியாவுக்காக தன்னுடைய முதல் போட்டியை பாகிஸ்தானுக்கு எதிராக 1979 இல் விளையாடினார். இந்தப் போட்டியில் இம்ரான் கான், சர்பராஸ் நவாஸ் பந்துவீச்சை எதிர்த்து விளையாடி 46 ரன்களை சேர்த்தார். 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் கபில் தேவ் தலைமையிலான இந்திய அணியில் இருந்தார் ரோஜர் பின்னி. அந்தத் தொடரில் மொத்தம் 18 விக்கெட்டுகளை சாய்த்தார் பின்னி. 1983 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் ரோஜர் பின்னிதான். அதன் பின்பு ஆஸ்திரேலியாவில் 1985 இல் நடைபெற்ற உலக கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரில் 17 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

1986 இல் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 58 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியா அந்தத் தொடரை வெல்ல பெரிதும் துணை புரிந்தார். அதேபோல 1987 இல் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் இரண்டு இன்னிங்ஸ் சேர்த்து 10 விக்கெட்டுகளை வீழ்த்தி தான் ஒரு தலை சிறந்த ஆல்ரவுண்டர் என நிரூபித்தார். இந்தியாவுாக்காக 27 டெஸ்ட் போட்டிகளிலும், 72 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார் ரோஜர் பின்னி. பின்பு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெற்ற அவர் பல்வேறு பொறுப்புகளையும் வகித்து வந்துள்ளார். 19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டிருக்கிறார் ரோஜர் பின்னி.

2000 ஆம் ஆண்டில் நடைபெற்ற U 19 கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்திய அணி வென்றது. அந்த அணிக்கு உன்முக்த் சந்த் என்பவர் கேப்டனாக இருந்தார். பின்பு 2012 இல் மேற்கு வங்க கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டார். மிக முக்கியமாக கர்நாடக கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாகியாகவும் பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தார். 2012 இல் இருந்து இந்திய தேர்வுக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வருகிறார். இவரது மகன் ஸ்டுவர்ட் பின்னி, இந்திய அணிக்காக விளையாடி கடந்தாண்டுதான் ஓய்வுப் பெற்றார். இவரின் மருமகள் மயாந்தி லேங்கர், விளையாட்டு நிகழ்ச்சிகளுக்கு தொகுப்பாளராக இருக்கிறார். கிரிக்கெட்டில் நீண்ட அனுபவமும் நிர்வாகத் திறனும் வாய்ந்த ரோஜர் பின்னி இப்போது பிசிசிஐயின் 36 ஆவது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com