பிசிசிஐ தலைவராக நீடிப்பாரா சவுரவ் கங்குலி ?

பிசிசிஐ தலைவராக நீடிப்பாரா சவுரவ் கங்குலி ?
பிசிசிஐ தலைவராக நீடிப்பாரா சவுரவ் கங்குலி ?

பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி தொடர்ந்து நீடிக்க முடியுமா என்பது குறித்து உச்சநீதிமன்றம் விரைவில் முடிவு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி ஓய்வுப் பெற்ற நீதிபதி லோதா தலைமையிலான கமிட்டி அளித்த சிபாரிசுகளின் அடிப்படையில் பிசிசிஐ விதிமுறைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. அவற்றில் முக்கியமான ஒன்று, ஒருவர் இந்திய கிரிக்கெட் வாரியத்திலோ அல்லது மாநில கிரிக்கெட் சங்கத்திலோ அல்லது இரண்டிலும் சேர்த்தோ தொடர்ந்து 6 ஆண்டுகள் பதவி வகித்தால் அடுத்த 3 ஆண்டுகள் கட்டாயம் இடைவெளிவிட்டு தான் மீண்டும் பொறுப்புக்கு வர முடியும் என்பதாகும்.

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்த பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் இந்த விதிமுறையில் மாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு, அதற்கு உறுப்பினர்களும் ஒப்புதல் அளித்தனர். அதாவது ஒருவர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் ஏற்கெனவே பதவியில் இருந்தாலும் அதை கணக்கிடாமல் பிசிசிஐ-யில் தொடர்ந்து 6 ஆண்டுகள் பொறுப்பில் இருக்கும் வகையில் விதிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் பிசிசிஐ செயலாளருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது.

இப்போதைய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ஏற்கெனவே மேற்கு வங்கம் கிரிக்கெட் சங்கத்தில் 5 ஆண்டுக்கு மேலாக பதவி வகித்து இருப்பதால் அதையும் சேர்த்து பார்க்கும் போது இந்த மாதத்துடன் 6 ஆண்டு பணி நிறைவு செய்கிறார். அதன் பிறகு அவர் பிசிசிஐ தலைவராக நீடிக்க முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவும் இதே சிக்கலில் இருக்கிறார். முன்பு குஜராத் கிரிக்கெட் சங்கத்தில் பொறுப்பில் இருந்த காலத்தையும் கணக்கிடும் போது ஜெய் ஷாவின் பதவி காலம் கடந்த மாதமே முடிவுக்கு வந்துவிட்டது.

இவர்களை பதவியில் நீட்டிக்க செய்யும் வகையில் திருத்தப்பட்ட புதிய விதிமுறைக்கு அனுமதி கேட்டு பிசிசிஐ சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி பாப்டே, நீதிபதி நாகேஷ்வர ராவ் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. காணொலி காட்சி மூலம் சிறிது நேரம் விசாரித்த நீதிபதிகள் அடுத்த 2 வாரத்துக்கு பிறகு இந்த விவகாரத்தை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறி வழக்கை தள்ளி வைத்தனர். இவர்களின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றுக்கொண்டால் கங்குலி 2024-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சிம்மாசனத்தில் அமர முடியும். நிராகரித்தால், உடனடியாக பதவி விலக வேண்டியது இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com