முன்னாள் விக்கெட் கீப்பர் கரீம் பிசிசிஐ மேலாளராக நியமனம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் சபா கரீம் பிசிசிஐ பொது மேலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பொதுமேலாளராக இருந்த ஸ்ரீதார் தனது பதவியை கடந்த செப்டம்பரில் ராஜினாமா செய்தார். இதனையடுத்து பொதுமேலாளர் பதவி காலியாக இருந்தது. இதனையடுத்து, சபா கரீம் பொது மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அமைப்பின் முதன்மை அதிகாரி ராகுல் ஜோரி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 50 வயதுடைய கரீம் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பதவியேற்கிறார்.
கரீம் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 34 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். 2000ம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவரது கண்ணில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவேண்டியிருந்தது.
சர்வதேச போட்டிகளில் குறைவான ரன்களை எடுத்து இருந்தாலும், முதல் தர போட்டிகளில் 7000 ரன்களை அவர் குவித்துள்ளார். அதில் 22 சதங்கள், 33 அரைசதங்கள் அடங்கும். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து வெளியேறிய பிறகு தொலைக்காட்சி கமெண்டரியிலும், கிழக்கு ஸோன் தேசிய செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.